கன்னட மொழி பற்றி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு தடை - பெங்களூரு கோர்ட்டு உத்தரவு

7 hours ago 4

பெங்களூரு,

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 'தக் லைப்' திரைப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் வெளியாகி விட்டது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து தான் கன்னட மொழி உருவானதாக பேசி இருந்தார். இதற்கு கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இதனால் அவரது 'தக்லைப்' படம் கர்நாடகத்தில் வெளியாகவில்லை.

இதுதொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டது. ஆனாலும் கர்நாடகத்தில் 'தக்லைப்' திரைப்படம் வெளியாகவில்லை. இதற்கிடையில், கன்னட இலக்கிய துறையின் தலைவர் மகேஷ் ஜோஷி, பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து கூறிய கருத்து மிகுந்த வேதனை அளிப்பதாகவும், கன்னடர்களுக்கு அவமரியாதையை கொடுத்திருப்பதாகவும், இதுபோன்ற பேச்சுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், நடிகர் கமல்ஹாசனின் பேச்சு கன்னடர்களின் மனநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால், இதுபோன்று அவர் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து, கன்னட மொழியை விட மற்ற மொழி சிறந்தது என்பன போன்ற கருத்துகளையும், கன்னட மொழிக்கு எதிரான கருத்துகளை கூறுவதற்கும், அதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடவும், அறிக்கைகளை வெளியிடுவதற்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு கோர்ட்டு தடை விதித்தது. கன்னட மொழி, இலக்கியம், பண்பாடு, கலாசாரத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிடவும் கோர்ட்டு தடை விதித்தது.

இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த மனு மீதான விசாரணையை வருகிற ஆகஸ்டு மாதம் 30-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read Entire Article