
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையிலும், அரசு பங்களாவை அவர் காலி செய்யாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடிதம் எழுதியுள்ளது.ஜூலை 1- ம் தேதியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடிதத்தினை எழுதியுள்ளது.
இந்தக் கடிதத்தில், முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவின் அனுமதி மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும், பங்களாவைவிட்டு அவர் காலி செய்யவில்லை. ஆகையால், எண் 5, கிருஷ்ணா மேனன் மார்க் பங்களாவில் இருந்து சந்திரசூட்டை வெளியேற வைத்து, பங்களாவை ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சந்திரசூட் கூறுகையில், எனக்கு வழங்கப்பட்ட வாடகை பங்களாவில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணி முடிவடைந்ததும் அங்கு சென்று விடுவேன். எனது மகள்களின் உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரப்படுகிறது. உயரிய பொறுப்பில் இருந்துள்ளேன். எனது பொறுப்பு குறித்து எனக்கு தெரியும். விரைவில் காலி செய்து விடுவேன்" என்று கூறியுள்ளார்.