கனடா பிரதமராக மார்க் கார்னி மீண்டும் தேர்வு - பிரதமர் மோடி வாழ்த்து

2 hours ago 2

ஒட்டாவா,

கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதையடுத்து கனடா மீதான வரியை அதிரடியாக அதிகரித்தார்.

உள்நாட்டு அரசியல் பிரச்சினை, டிரம்ப் வரி விதிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் லிபரல் கட்சியை சேர்ந்த ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

அவர் கடந்த மாதம் 14-ந் தேதி கனடாவின் 24-வது பிரதமராக பதவியேற்றார்.கனடா நாடாளுமன்றத்தின் பதவிகாலம் வரும் அக்டோபர் மாதம் வரை இருக்கும் நிலையில் பிரதமர் மார்க் கார்னி நாடாளுமன்றத்தை கலைத்தார். மேலும், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் மார்க் கார்னி அழைப்பு விடுத்தார். அதன்படி, ஏப்ரல் 28ம் தேதி கனடா நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னி களமிறங்கினார். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ் பிரதமர் வேட்பாளாரக களமிறங்கினார். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தேர்தல் முடிந்தநிலையில் 43.4 சதவீதம் வெற்றி பெற்று மார்க் கார்னி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 4-வது முறையாக லிபரல் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. மேலும் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவு பெற்ற புதிய ஜனநாயக கட்சி வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இலங்கை தமிழர்களான அனிதா ஆனந்த், ஹரி ஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகிய 3 பேரும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதற்கிடையே கனடாவை அமெரிக்காவின் ஒரு மாகாணம் என கருதிய ஜனாதிபதி டிரம்ப் அதனை தன்னுடன் இணைக்க போவதாக எச்சரிக்கை விடுத்தார். இதனை தனக்கு சவாலாக எடுத்துக்கொண்ட மார்க் கார்னி இதற்கு எதிராக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதுவே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கனடாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "கனடாவின் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், லிபரல் கட்சி வெற்றி பெற்றதற்கும் மார்க் ஜே கார்னிக்கு வாழ்த்துக்கள். இந்தியாவும், கனடாவும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சிக்கு உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் துடிப்பான மக்களுக்கு இடையேயான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. எங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், எங்கள் மக்களுக்கு அதிக வாய்ப்புகளை அளிக்கவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Read Entire Article