
அட்சய திருதியை தினம் இன்று (30-4-2025) கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பதும், நாம் தொடங்கும் தொழில்கள், நமது நற்செயல்கள் பன் மடங்கு பலன் தரும் என்பதும் நம்பிக்கை. அதனால்தான், இந்த நாளில் மதிப்புமிக்க தங்கம் வாங்க பலரும் விரும்புகின்றனர். ஒரு கிராம் அளவிலாவது தங்கம் வாங்கவேண்டும் என நினைக்கின்றனர். இதனால் பெரும்பாலான நகைக்கடைகளில் இன்று நகை வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர்.
ஆனால், தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து விண்ணை தொட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் சாமானிய மக்களால் தங்கத்தை நினைத்துப் பார்க்கவே முடியாத நிலை உள்ளது. எனவே, வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் கஷ்டப்பட்டு கடன் வாங்கி தங்கம் வாங்க நினைக்கவேண்டாம். அப்படி வாங்கினால் நிம்மதியை குலைத்துவிடும். கூடுமானவரை தங்கம் வாங்குவதை தவிர்க்கலாம். தங்கம் வாங்க வசதியில்லாதவர்கள், வெள்ளி வாங்கலாம், வீட்டிற்கு மிகவும் உபயோகமான வேறு பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடையலாம். இப்போது தங்கத்தை முதலீடாக கருதி பலரும் வாங்குவதால், அவர்களுக்கு இந்த நாள் நல்ல தேர்வாக இருக்கும்.
வசதியில்லாதவர்கள் அட்சய திருதியை நாளில் உப்பு வாங்கி வைப்பது சிறப்பு. உப்பு மட்டுமின்றி அரிசி, ஆடைகள் என தேவையான எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும் என்பது ஐதீகம். எனவே வசதி இல்லாதவர்கள் உப்பு, மஞ்சள், நெல், அரிசி ஆகியவற்றை வாங்கி மகாலட்சுமி படத்திற்கு முன் வைத்து வழிபடலாம்.
இன்றைய தினம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். உணவு, வஸ்திரம் போன்றவற்றை தானமாக வழங்கலாம். பசுவுக்கு கீரை வகைகளை வழங்கலாம். குறிப்பாக இந்நாளில் அன்னதானம் செய்வது மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது. அட்சய திருதியை தின விரதம் இருக்க விருப்பம் உள்ளவர்கள் விரதம் இருந்து பூஜை செய்யலாம்.
சாஸ்திர சம்பிரதாயத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இதுபோன்று பொருட்களை வாங்கி மகிழ்கிறார்கள், வழிபாடுகளை மேற்கொள்கிறார்கள். மற்றவர்கள் இதை ஒரு வியாபார யுக்தியாகவே கருதி, கடந்து செல்கின்றனர்.