
சென்னை,
மத்திய கொல்கத்தாவின் பால்பட்டி மச்சுவா அருகே ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் நேற்று இரவு 8.15 மணயளவில் தீ ஏற்பட்டது. இதனால் ஓட்டலில் பலரும் சிக்கி தவித்தனர். சில மணி நேர போராட்டங்களுக்கு பின்னர் தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் தீயில் கருகிய நிலையில் 14 பேரின் உடலை அதிகாரிகள் மீட்டனர். உயிரிழந்த 14 பேரில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகியோரும் மற்றும் பலரும் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்; நெஞ்சம் கலங்கினேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, இத்துயர்மிகு நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு நமது அரசு துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கொல்கத்தாவில் நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று தமிழர்கள் உட்பட பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன் . படுகாயமடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் .
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது;-
கொல்கத்தாவின் புர்ராபஜார் பகுதியில் உள்ள விடுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை மேற்கு வங்க அரசுடன் பேசி தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.