* பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என வியாசர்பாடி போலீசார் அறிவிப்பு
பெரம்பூர்: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி நாகேந்திரனின் உறவினர்களின் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் சோதனை செய்தபோது 51 கத்திகள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, நாகேந்திரன் உறவினர்கள் 7 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். மேலும், நாகேந்திரனின் 2வது மகனும், பாஜ பிரமுகருமான அஜித்ராஜ் மீதும் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
இதனிடையே, நாகேந்திரன் உறவினர்கள் வீட்டில் கிடைத்த ஆவணங்களை கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 17வது பிளாக் பகுதியை சேர்ந்த நாகேந்திரனின் தங்கை கற்பகம் (47), அவரது கணவர் சதீஷ் (49) ஆகிய இருவர் கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டு வந்ததும், இவர்கள் நாகேந்திரன் பெயரை பயன்படுத்தி பலரை மிரட்டி பணம் சம்பாதித்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, கடந்த 24ம் தேதி வியாசர்பாடி பள்ள தெருவை சேர்ந்த நற்குணன் (70) மற்றும் 38 வயது பெண் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் நாகேந்திரனின் தங்கை கற்பகம் மற்றும் அவரது கணவர் சதீஷ் ஆகிய இருவரை வியாசர்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், வியாசர்பாடி மேகசின்புரம் பகுதியை சேர்ந்த மதிவதனம் (56) என்பவர், வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தனது மகனின் மருத்துவ செலவிற்காகவும், கணவரின் தொழிலுக்காகவும் கொரோனா காலகட்டத்தில் கற்பகத்திடம் ரூ.50 ஆயிரம் வட்டிக்கு வாங்கினேன். அப்போது, ரூ.10 ஆயிரம் வட்டி பிடித்துக்கொண்டு ரூ.40 ஆயிரம் கொடுத்தார். பின்னர், வட்டியோடு சேர்த்து ரூ.50 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்த போதிலும், தொடர்ந்து கற்பகம் மற்றும் அவரது கணவர் சதீஷ் ஆகிய இருவரும் எங்களை மிரட்டி, பல மடங்கு பணத்தை எங்களிடமிருந்து பறித்துக் கொண்டனர். அவர்களின் மிரட்டலால் எனது கணவர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்து விட்டார். ஆனாலும், கற்பகம் மற்றும் அவரது கணவர் சதீஷ் தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்து வந்தனர்.
தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற விவரம் அறிந்து, இந்த புகாரை அளிக்கிறேன், என மதிவதனம் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஏற்கனவே சிறையில் உள்ள கற்பகம் மற்றும் சதீஷ் ஆகியோர் மீது வியாசர்பாடி போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகேந்திரன் உறவினர்களால் கந்துவட்டி கொடுமை மற்றும் வேறு ஏதாவது துன்புறுத்தலுக்கு ஆளாகி இருந்தால் அவர்கள் தைரியமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கந்து வட்டி வசூல், கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல ரவுடி நாகேந்திரனின் தங்கை மைத்துனர் மீது மேலும் ஒரு வழக்கு appeared first on Dinakaran.