
முருகப்பெருமானை வழிபடும் முக்கிய விரத நாட்களில் ஒன்றான தை கார்த்திகை விரதம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினை பெற்றனர். கார்த்திகை பெண்களை பாராட்டிய சிவபெருமான், அவர்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான் என்றும், கார்த்திகை பெண்களின் நாளான கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்றும் கூறி ஆசீர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளை பெற்று வருகிறார்கள்.
ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபடுவார்கள். தை மாதத்தில் வரக்கூடிய கார்த்திகை தினத்தில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் வேண்டிய வரங்கள், நினைத்த காரியங்கள் நினைத்படி நடக்கும் என்பது ஐதீகம்.
விரதம் இருப்பவர்கள் காலை எழுந்தவுடன் குளித்துவிட்டு முருகப்பெருமானை வழிபாடு செய்துவருகிறார்கள். பெரும்பாலான பக்தர்கள் முந்தைய நாளான பரணி நட்சத்திரத்தில் நண்பகல் உணவு எடுத்துக்கொண்டு விரதத்தை தொடங்கிவிட்டனர்.
விரத நாளில் பாராயணம், தியானம், கோவில் வழிபாடு மேற்கொள்ளலாம். மறுநாள் ரோகிணி அன்று காலையில் நீராடி முருகனை வழிபட்டு அதன்பிறகு உணவு அருந்தி விரதத்தை நிறைவு செய்யவேண்டும். கார்த்திகைக்கு முதல் நாளில் தொடங்கி, கார்த்திகைக்கு மறுநாள் வரை விரதம் தொடரும் முறையே சிறந்தது என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள்.
கார்த்திகை தினமான இன்று முருகப்பெருமானுக்கு பாசிப்பருப்பு பாயசம், இனிப்புகள், பழங்கள் படைத்து வழிபடலாம். நாள் முழுவதும் உணவு அருந்தாமல் முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், பசி தாங்க முடியாதவர்கள், உடல்நல பாதிப்பு உள்ளவர்கள் பால், பழம் சாப்பட்டு விரதத்தை தொடரலாம்.
செவ்வாயின் அதிபதியாக முருகப்பெருமாள் விளங்குவதால், அவரை வழிபட்டால் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட சிக்கல்கள், செவ்வாய் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என கூறப்படுகிறது.