
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பல்லியா அருகே உள்ள பகதூர்பூரை சேர்ந்தவர் தேவேந்திரகுமார் (வயது 62). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி மாயாதேவி (44). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதற்கிடையே தேவேந்திரகுமார் திடீரென மாயமானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு வயலில் ஒரு பிளாஸ்டிக் பையில் மனித கைகளும், கால்களும் கிடைத்தன. இதனை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது தேவேந்திரகுமாரின் மகள் தனது தாயார் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் தெரிவித்தார்.
இதனையடுத்து மாயாதேவியை போலீசார் தங்களது பாணியில் விசாரிக்க தொடங்கினர். முதலில் உண்மையை சொல்ல மறுத்த மாயாதேவி, இறுதியில் உண்மையை கூறினார்.
அதன்படி அனில் யாதவ் என்பவருடன் மாயாதேவிக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை கணவர் கண்டித்ததால் அவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தார். பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை கை, கால், தலை என 6 பாகங்களை துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். அதனை நள்ளிரவில் எடுத்துச்சென்று வெவ்வேறு பகுதிகளில் வீசி எறிந்து சென்றுள்ளனர். இந்த கொடூர செயலை செய்த மாயாதேவியை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய அனில் யாதவை போலீசார் தேடி வந்தனர். பகரிகாரா என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த அனில்யாதவ் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தியதில் அனில்யாதவ்வின் காலில் குண்டுபாய்ந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.