கூத்தாண்டவர் கோவிலில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் - விடிய, விடிய நடனம்

3 hours ago 3


கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. 3-ம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகள் தங்களின் குலதெய்வமாக வணங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 18 நாட்கள் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி மாலை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பாரதம் பாடும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் வரை நடந்தது. இரவில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்தில் குவிந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை அரவான் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான திருநங்கைகள், பட்டுப்புடவை அணிந்தும், தலைநிறைய பூக்களை வைத்துக்கொண்டும், கைநிறைய வளையல்கள், காது, மூக்கு, கழுத்தில் நகைகளை அணிந்து தங்களை புதுமணப் பெண் போல் அலங்கரித்துக்கொண்டு கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் அங்குள்ள கடைகளில் திருமாங்கல்யம் வாங்கிய திருநங்கைகள், கோவிலுக்குள் சென்று அரவானை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அரவானை தங்கள் கணவனாக பாவித்துக்கொண்டு கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர். திருநங்கைகளோடு வேண்டுதலின்பேரில் ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகளும் தாலி கட்டிக்கொண்டனர்.

தாலி கட்டிய பிறகு புதுமணப் பெண் போல் காட்சியளித்த திருநங்கைகள், கூத்தாண்டவர் கோவில் அருகில் இரவு முழுவதும் விடிய, விடிய நடனமாடியும், கும்மியடித்தும் கூத்தாண்டவரை தங்களது கணவராக நினைத்தும் அவரின் அருமை, பெருமைகள் குறித்து ஆடிப்பாடியும் உற்சாகமடைந்தனர்.

இந்நிலையில் விழாவின் 16-வது நாள் நிகழ்ச்சியாக இன்று (புதன்கிழமை) அதிகாலை கோவிலில் உள்ள அரவான் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகு தேரோட்டம் நடக்கிறது. கோவிலின் 4 மாட வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்தபடி வரும் தேர், பின்னர் அழிகளம் நோக்கி புறப்பட்டவுடன் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுவார்கள்.

அதன் பிறகு மதியம் நத்தம் கிராம பந்தலுக்கு தேர் சென்றடைந்ததும் அங்கு அரவான் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது திருநங்கைகள் வெள்ளை சேலை அணிந்து விதவைக்கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுதுவிட்டு கூவாகத்தில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச்செல்வார்கள்.

Read Entire Article