கந்தசஷ்டி விழா: திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்ச்சி தொடங்கியது

2 hours ago 3

திருச்செந்தூர்,

கந்தசஷ்டி விழா

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் சிறப்பு மிக்கதாக கருதப்படுவது கந்தசஷ்டி திருவிழாவாகும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் உள்ள தற்காலிக கொட்டகைகளில் பக்தர்கள் விரதம் இருந்து வருகிறார்கள்.

விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜை, யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, பின்னர் தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் சுவாமி, வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் சுவாமி-அம்பாள்களுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோலாகலமாக தொடங்கிய சூரசம்ஹார நிகழ்ச்சி 

இந்நிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் தற்போது கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முருகப் பெருமானான சுவாமி ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்வதற்காக கோவிலில் இருந்து எழுந்தருளி கடற்கரைக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து, தரகாசூரன், சிங்கமுகாசூரன் மற்றும் சூரபத்மனை தனது வேல் கொண்டு முருகப்பெருமான் வதம் செய்ய உள்ளார்.

 

சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர். கந்த சஷ்டி விழாவையொட்டி, விரதம் இருந்த பக்தர்கள், திருச்செந்தூரில் தங்களது விரதத்தை நிறைவுசெய்தனர். அவர்கள் 'கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா..' என்று முழக்கமிட்டு வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் கம்பு மற்றும் கம்பிகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. 4,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Read Entire Article