
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நான் மமதையில்பேசுகிறவன் அல்ல. "கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை" என்று ஆணவக் குரலில் சொல்பவன் அல்ல! எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது. என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம்! சொல்லைவிட செயலே பெரிது! வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று நான் சொல்வது, உங்கள் மேல்இருக்கும் நம்பிக்கையில்தான்.
பொதுக்குழுவுக்கு வராத, இரவு பகல் பார்க்காமல் - வெயில் மழை பார்க்காமல் - தனக்கு என்ன பயன் என்று பார்க்காம உழைக்கும்,கோடிக்கணக்கான உடன்பிறப்புகளையும் நம்பித்தான் சொல்கிறேன். கழகம் இதுவரைக்கும் அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் நீங்கள்தான் காரணம்! உடன்பிறப்புகளான நீங்கள் இல்லாமல்கழகமும் இல்லை; நானும் இல்லை! என்னைத் தலைவராக உருவாக்கியது நீங்கள்! என்னை முதல்-அமைச்சராக்கி உயர்வைத் தந்தது, நீங்களும் – மக்களும்! உலகத்தில் எந்தக் கட்சிக்கும், இப்படிப்பட்ட உறுதிமிக்க உழைப்பாளிகள் தொண்டர்களாக கிடைத்திருக்க மாட்டார்கள்!
சூரியன் நிரந்தரமானது. அதேபோன்று கழகமும் நிரந்தரமானது. கழகம் எப்படி நிரந்தரமானதோ, அதேபோன்று கழக ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை நாம் உருவாக்கவேண்டும்.
தி.மு.க. ஆட்சிக்கு எதிரான அலையைவிட, ஆதரவு அலைதான் அதிகமாக வீசுகிறது. அது வெளியே தெரியாமல் மறைக்க - திசை திருப்ப சிலர் நினைக்கிறார்கள்.
கடந்த அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி ஆட்சியால், அதல பாதாளத்துக்கு சென்ற தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம். மத்திய பா.ஜ.க. அரசு, நம்முடைய உரிமைகளுக்கு எதிராக எத்தனை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தனையையும் எதிர்த்து இன்றுவரை போராடி வருகிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.