
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்து போர் பதற்றம் உருவாகியது.
அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அதேவேளை, எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நீடித்து வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகியுள்ளது. இரு நாடுகளும் மோதலை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்தியா திறம்பட சமாளித்து பதிலடி கொடுத்து வருகிறது.
இது குறித்து பல விளையாட்டு வீரர்ளும், சினிமா பிரபலங்களும், பல்வேறு நட்சத்திரங்களும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு தனது எக்ஸ் பக்கத்தில்,
"கண்ணுக்கு கண் என்பது உலகம் முழுவதையும் குருடாக்கிவிடும். நினைவில் கொள்ளுங்கள். இது பலவீனத்திற்கான அழைப்பு அல்ல. மாறாக ஞானத்தின் நினைவூட்டல். நீதி உறுதியாக நிற்க வேண்டும். ஆனால் மனிதநேயத்தை ஒருபோதும் இழக்கக்கூடாது. நாம் நமது தேசத்தை தீவிரமாக நேசிக்கலாம். அதே நேரத்தில் நம் இதயங்களில் இரக்கத்தை வைத்திருக்க வேண்டும். தேசபக்தியும் அமைதியும் கைகோர்த்து நடக்க முடியும்" என்று கூறினார்.