சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக, பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை குறிப்பிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த வாரம் அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் கைது செய்யப்பட்டார். அந்த செய்தியை மறைக்க அதிமுக நடத்திய நாடகம்தான் ’யார் அந்த சார்?’ என்பது வெட்டவெளிச்சமானது. அதிமுகவை அடியொற்றி, அதன் கள்ளக் கூட்டாளி பாஜகவும் அடுத்து பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறது.
பாஜகவின் மாநில பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ்.ஷா நிகழ்த்திய பாலியல் வன்கொடுமை அம்பலத்திற்கு வந்திருக்கிறது. மதுரையைச் சேர்ந்த தனது பேத்தி வயதுடைய 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் எம்.எஸ்.ஷா கைதாகியிருக்கிறார். அதிமுகவின் வட்ட செயலாளர் சுதாகரும் பாஜக பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ்.ஷாவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை நிகழ்த்திய போக்சோ குற்றவாளிகளாக இருப்பது பேரவலம். இத்தகைய பாலியல் குற்றவாளிகளின் கூடாரத்தை வைத்துக் கொண்டுதான், ’அரசியல் கோமாளி’ அண்ணாமலை நடத்திய சவுக்கடி நாடகத்தை எண்ணி, இப்போது நாட்டு மக்கள் காறி உமிழ்கிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, தன் வீட்டு முன்பு தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை, தன் கட்சிக்காரர் எம்.எஸ்.ஷாவின் பாலியல் லீலைகளுக்காகக் கமலாலயத்தில் தன்னைத் தானே காறித் துப்பிக் கொள்ளும் நிகழ்வுக்கு அண்ணாமலை தேதி குறித்துவிட்டாரா?! மதுரையில் நின்று கண்ணகியைப் போலச் சிலம்பு ஏந்தி அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்ட குஷ்பு, பாஜகவின் எம்.எஸ்.ஷா கைதுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்? கண்ணகி நீதி கேட்ட மதுரையில் போராடிய குஷ்பு, அதே மதுரையில் பாஜக பிரமுகரால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏன் நீதி கேட்டுப் போராடவில்லை? அந்த சிலம்பு காணாமல் போய்விட்டதா?
திமுக ஆட்சிக்கு எதிரான செய்திகளுக்கு எல்லாம் எட்டிப்பார்த்து வீராவேச நடிப்பைக் காட்டும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எம்.எஸ்.ஷா பாலியல் விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை? எம்.எஸ்.ஷா பின்னால் இருக்கும் சார் யார் எனக் கேட்டு பழனிசாமி போஸ்டர் அடிப்பாரா? தனது கள்ளக் கூட்டாளி பாஜகவின் பாலியல் குற்றம் என்றதும் ஓடி ஒளிந்து விட்டாரா கோழை பழனிசாமி? கள்ள கூட்டணிக்காக பழனிசாமி நடத்தும் கள்ள மவுனமா இது?
பாலியல் குற்றவாளிகளை, அதிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை நிகழ்த்தும் கொடூர மனநிலைக் கொண்டவர்களைத் தனது கட்சியின் பொறுப்பாளர்களாக வைத்துக் கொண்டிருக்கும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கு பெண்கள் மீது கொஞ்சம் கூட கவலையில்லை. அப்படி கவலை இருந்தால் யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். குரல் எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கூட்டணியினர் என்பதால் மூடி மறைக்கிறார். இப்படி தங்களுடைய அசிங்கமான அரசியலை எல்லாம் மூடி மறைக்கத்தான் கள்ளக்கூட்டணி நடத்தும் அரசியல் நாடகம் எல்லாம் மக்கள் அறிவர். அதனால் இந்த நாடகங்கள் இனி ஒரு நாளும் மக்களிடம் எடுபடாது”என்று கூறப்பட்டுள்ளது.
The post கண்ணகி போல் நீதி கேட்ட குஷ்பு என்ன செய்து கொண்டிருக்கிறார்: பாஜகவின் பாலியல் குற்றம் என்றதும் ஓடி ஒளிந்து விட்டாரா கோழை பழனிசாமி? அமைச்சர் கீதாஜீவன் கேள்வி appeared first on Dinakaran.