கணிப்புகளை புரட்டிப்போட்ட தேர்தல் முடிவுகள்!

3 months ago 23

புதுடெல்லி,

சமீபத்தில் ஜம்மு காஷ்மீர், அரியானா ஆகிய இரு மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்தன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம், முடிவுகள் வெளியான நாளில் அப்படியே தலைகீழாக மாறிப்போய் இருந்தது. அதாவது, "ஜம்மு காஷ்மீரில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. தொங்கு சட்டசபை அமையும். அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்" என்று கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் அது மாறிப்போய் இருந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இந்தத் தேர்தலில், பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை ஒரு அணியாகவும், பா.ஜனதா மற்றொரு அணியாகவும், கடந்த தேர்தலின்போது பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்ற மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி தனித்தும் களம் கண்டது. ஜம்முவில் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழ்வதால், அவர்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே பா.ஜனதாவுக்கு விழுந்தது. மொத்தமுள்ள 43 தொகுதிகளில் 29 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி 8 இடங்களிலும், இதர கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றிபெற்றன.

இதுபோல, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் காஷ்மீர் பகுதியில் பா.ஜனதா ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மொத்தமுள்ள 47 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி பெரும்பான்மை இடங்களைப்பெற்றுள்ள நிலையில், 'இந்தியா' கூட்டணி 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆக, மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும், பா.ஜனதா 29 இடங்களிலும், மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

காஷ்மீரை பொறுத்த அளவில், தேசிய மாநாடு கட்சிக்குத்தான் பெரிய வெற்றியாகும். பா.ஜனதா உள்பட அனைத்து கட்சிகளும், "மாநில அந்தஸ்தை ஜம்மு காஷ்மீருக்கு பெற்றுத்தருவோம்" என்று சொன்ன வாக்குறுதி நிறைவேறும் நன்னாளைத்தான் அங்குள்ள மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அரியானா மாநிலத்தில் பா.ஜனதா 'ஹாட்ரிக்' வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தொடர்ந்து 3 முறை ஒரு கட்சி அங்கு வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. எப்படி ஜம்மு காஷ்மீரில் மத ரீதியாக வாக்குகள் பிரிந்ததோ, அதுபோல அரியானாவில் சாதி ரீதியாக வாக்குகள் பிரிந்தன. காங்கிரஸ் கட்சி ஜாட் சமுதாய வாக்குகளையே நம்பியிருந்த நிலையில், பா.ஜனதா அதற்கு எதிரான இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகளை அப்படியே ஒருங்கிணைத்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பா.ஜனதா 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தாலும், வாக்கு சதவீதத்தைப் பார்த்தால் பா.ஜனதா 39.94 சதவீதமும், காங்கிரஸ் கட்சி 39.09 சதவீதமும் பெற்றுள்ளது.

ஆக, இரு கட்சிகளுக்கும் இடையேயுள்ள வாக்கு வித்தியாசம் ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான். காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் சுயேச்சையாக போட்டியிட்ட 17 பேரின் வாக்குகளை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டிப்பார்த்தால் நல்ல வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும். அதுபோல், ஆம் ஆத்மியையும் கூட்டணியில் சேர்க்காததும் ஒரு பலவீனமாகும். ஆக, இந்த தேர்தல் எதிர்காலத்துக்கு பல படிப்பினைகளைக் கொடுத்துள்ளது.

Read Entire Article