
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தனது குழந்தை மற்றும் குடும்பத்தை மட்டும் கவனித்து கொள்வார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதில் கவனம் செலுத்துவார். இனிமேல் அவர் கட்சிப் பணிகளில் ஈடுபடமாட்டார். ஆம்ஸ்ட்ராங் சகோதரர்களின் திறனுக்கு ஏற்றாற்போல் அவர்கள் கட்சிப் பணிகளை தொடர்வார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கடைசிவரை உறுதுணையாக இருக்கும். தமிழ்நாடு மாநில தலைவர் ஆனந்தன் தலைமையின் கீழ் கட்சியை வலுப்படுத்தவும், அனைத்து தேர்தல்களை எதிர்கொள்ளவும் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து உழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று மாலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நிருபர்களிடம் கூறும்போது, "ஆம்ஸ்ட்ராங் வழக்கை நடத்துவதாக கூறி மாநில தலைவர் பதவிக்கு வந்த ஆனந்தன், சரிவர வழக்கை நடத்தவில்லை. அவர் தன்னிச்சையாக தலைமைக்கு தெரிவிக்காமல் இந்த முடிவை எடுத்துள்ளார். இதுபற்றி தங்களுக்கு தெரியாது என கட்சியின் தலைமை கூறிஉள்ளது. விரைவில் செயற்குழுவை கூட்டி நல்ல முடிவு எடுப்போம்" என்றார்.