‘‘பெண் பணியாளர்களை வாய்க்கு வந்தபடி பேசும் உயர் அதிகாரியை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக பேசிக்கிட்டு இருக்காங்களாமே தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கடைகோடி மாவட்டத்தில் உயர் அதிகாரிகள் தங்கள் கீழ்நிலையில் உள்ள அலுவலர்களை வாய்க்கு வந்தபடி பேசுவது தொடர்கதையாகியுள்ளதாம்.. இந்த பட்டியலில் தற்போது லேட்டஸ்டாக இடம்பிடித்து இருப்பவர் சுகாதாரத்துறையின் உயர் அதிகாரியாம்.. அண்மையில் சுகாதார நிலையம் ஒன்றில் ஆய்வுக்கு சென்ற அவர் அங்கிருந்த பெண் பணியாளர்களை பேய், பிசாசு என்று வாய்க்கு வந்தபடி வசைபாடினாராம்.. காரணமே இல்லாமல் அவர் சர்வ சாதாரணமாக வசைபாடியது அந்த பணியாளர்களை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.. அவரது நடவடிக்கைகள் இதுபோன்று தொடர்ந்தால் உயர் அதிகாரியை கண்டித்து போராடுவதை தவிர வேறு வழியில்லை என்று பணியாளர்கள் கூடி பேசி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தலைநகர் செல்வதை தவிர்த்து வரும் இலைக்கட்சியின் மாஜி அமைச்சர் தன்னை மீறி மாவட்டத்தில் எதுவும் செய்ய முடியாதுன்னு ஆதரவாளர்களிடம் தெரிவித்தாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி மாஜி அமைச்சர் சமீபகாலமாக தலைநகர் செல்வதை தவிர்த்து வருகிறாராம்.. இந்த விஷயத்தில் தலைமை பெரிதாக ஆரம்பத்தில் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தற்போது, மாஜி அமைச்சர் தவிர்த்து வருவதற்கான காரணத்தை கண்டறிய சேலத்துக்காரர் டீம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாம்… இந்த தகவல் தெரிய வந்த மாஜியானவர், தலைமை தன்னை எதுவும் செய்ய முடியாது, தன்னை கேள்வியும் கேட்க முடியாது. தன்னை மீறி மாவட்டத்தில் கட்சியில் எதுவும் செய்ய முடியாது என அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் பேசிக்கிட்டாராம்.. தலைமை எடுக்கும் முடிவை கூட மாற்றி தன்னுடைய மாவட்டத்தில் செயல்படுத்தி வருவதாக மாஜியானவர் மீது நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புயல், மழையில் தப்பிப்பது எப்படி என லாட்டரி தொழிலதிபரின் ஆதரவாளர் விஞ்ஞான ரீதியிலான ஆடியோ வெளியிட்டது தொகுதி மக்களை மேலும் டென்ஷன் ஆக்கி இருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் லாட்டரி அதிபர் மகன் வருகையால் தொகுதியை தாரைவார்க்க முடிவெடுத்துள்ள மலர் கட்சி பிரதிநிதியான முழம்குமார், தொகுதி மாறும் முடிவுல இருக்கிறதால் அதிருப்தியில இருக்கிறாங்களாம் அப்பகுதி வாக்காளர்கள். இதுஒருபுறமிருக்க, புயலின் வெள்ளநீர் வெளியேற்றும் களப்பணியில் இருந்த முழம்குமாரின் முயற்சி தோல்வியில் முடியவே, தொகுதி மக்கள் இனிமேல் தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பது குறித்த ஒரு ஆடியோவை வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்காராம்.. விஞ்ஞான ரீதியிலான அவரோட யோசனை ஆடியோ, வலைதளத்தில பரவி அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தி இருக்காம்..
கோடிக்கணக்கில செலவிட்டு நீர்இறைக்கும் மோட்டார் வைத்தாலும் புயல்போன்ற போிடர் காலத்தில் வெள்ளத்தை யாராலும் இனி தடுக்க முடியாது என்பதால், தாழ்வான பகுதி குடியிருப்புவாசிகள் இனிமேல் கீழ்தளத்தை விட்டுவிட்டு முதல்மாடிக்கு சென்றுவிட வேண்டுமாம்.. கீழ்தளத்தில் வசித்தாலும் உயரமான கட்டில் போட்டு டாப்பில் டிவியையும் மாட்டிவிட வேண்டுமாம்.. பிரிட்ஜை மாடியில் கொண்டு வைத்துவிட வேண்டுமாம்.. வேறுவழியில்லை இப்படி அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணித்தான் ஆகணும், உஷாராக இருங்கன்னு முழம்குமார் வெளியிட்டுள்ள விஞ்ஞான ஆடியோ, தொகுதி மக்களை மேலும் டென்ஷன் ஆக்கி இருக்கிறதாம்.. ஏற்கனவே வெள்ளத்தில உடைமைகளை, உணவுகளை இழந்து துயரத்தில் இருக்கிறோம். இந்நிலையில இவரு வேற ஆலோசனை சொல்ல வந்துட்டாருன்னு பப்ளிக் கடும் கோபத்தில இருக்காங்களாம்.. முழம்குமாரின் ஆடியோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் வேதனை தந்துள்ளதால் அவரது ஆதரவோடு அடுத்த தேர்தலுக்கு வரவுள்ள அடுத்த லாட்டரி தொழிலதிபருக்கு சிக்கல்தான்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வெளிநாட்டு படிப்பு படித்துவிட்டு மலையானவர் திரும்பி வந்தாலும்கூட இன்னும் தாமரைக்கட்சியினர் சோர்ந்துபோய் தான் இருக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மலையானவர் தலைவரான பிறகு வெயிலூர் மாவட்டத்துல பெரிய அளவுல கட்சியில மாற்றம் நடந்தது. இந்த மாற்றத்தில் ஆரம்பத்தில் இருந்து கட்சி பொறுப்புக்கு வந்தவர்களின் கருத்துகளை கேட்காமலேயே மாற்றம் நடந்ததால் அப்போதே வெயிலூர் மாவட்ட தாமரை கட்சியில் முணுமுணுப்புகள் எழுந்தன. அதற்கேற்ப மலையானவர் தலைவராவதற்கு முன்பு வெயிலூரில் பொறுப்புகளில் இருந்தவர்கள் அடிக்கடி மக்கள் பிரச்னைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபடுவார்களாம்.. ஆனால் இப்போது அதுபோல் இல்லையாம்.. இதுபற்றி கடந்த தேர்தலின்போதே தலைமைக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்..
இப்போது மலையானவர் வௌிநாட்டுக்கு போய் வந்ததும் ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தும் பயனில்லையாம்.. அதற்கேற்ப நேற்று நடந்த தாமரையின் தாய் அமைப்பின் ஆர்ப்பாட்டத்தில் கூட, தாமரையின் பழைய ஆட்களின் முகங்கள்தான் தென்பட்டதாம்.. இதேபோல் சென்றால் 2026 தேர்தலில் என்ன செய்வது? இதுவரை வெயிலூர் மாவட்டத்தில் பூத் கமிட்டிகளே சரியாக கட்டமைக்கப்படவில்லை என்பதுதான் அடிமட்ட தாமரை சொந்தங்களின் ஆதங்கமா இருக்கு..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சட்டம்-ஒழுங்கு டூட்டி பார்க்க இன்ஸ்பெக்டர்களின் ஜீப்களுக்கு டிரைவர்களாக பணியாற்றும் போலீஸ்காரர்களும் விரும்புறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பனியன் நகரில் 8 சட்டம் -ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருது..
இதுதவிர சைபர் க்ரைம், மத்திய குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு என ஏராளமான பிரிவுகளும் செயல்படுகின்றன.. இதற்கு எல்லாம் தனித்தனியா இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறாங்க.. இந்த இன்ஸ்பெக்டர்களின் ஜீப்களுக்கு தலா இரண்டு போலீஸ்காரங்க டிரைவர்களாக டர்ன் டூட்டி பார்த்துக்கிட்டு வர்றாங்க.. நீண்ட நாட்களா டிரைவர் டூட்டி மட்டும் பார்த்துக்கிட்டு இருக்கிறதால அவங்களுக்கு சட்டம், ஒழுங்கு தொடர்பான எந்த ஒரு வேலையும், அனுபவமும் கிடைக்காம போயிடும்னு பீல் பண்றாங்க.. எனவே நீண்ட காலமாக டூட்டி பார்க்கும் இன்ஸ் டிரைவர்களை சட்டம்- ஒழுங்கு ஸ்டேஷன் டூட்டி பார்க்க அனுமதிக்கனும்னு கோரிக்கை வெச்சிட்டு இருக்காங்களாம்.. இதனால டிரைவர் டூட்டி பார்க்க விரும்பும் போலீஸ்காரங்க விருப்பமும் நிறைவேற வாய்ப்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post கட்சிப் பணிகளில் தாமரை தொண்டர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.