
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 1-ம் தேதி வெளியான படம் 'ரெட்ரோ'. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ரெட்ரோ திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவருக்குப் படம் மிகவும் பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தலைவர் ரஜினிகாந்த் ரெட்ரோவைப் பார்த்துவிட்டார். அவருக்கு படம் ரொம்பப் பிடித்திருக்கிறது. படத்தை பார்த்து தலைவர் சொன்னது இதுதான், "படக்குழுவின் அட்டகாசமான முயற்சி என்னை மலைக்க வைக்கிறது. சூர்யாவின் நடிப்பு சூப்பர்.. படத்தின் கடைசி 40 நிமிடங்கள் அற்புதமாக இருந்தது. சிரிப்புக்கான காட்சி சிறப்பாக இருந்தது.. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக" என்றார். அதை கேட்ட நான் "நான் அப்படியே பறக்கிறேன்.. லவ் யூ தலைவா" என கார்த்திக் சுப்பராஜ் பதிவிட்டுள்ளார்.