தென்தாமரைக்குளம்: மருந்துவாழ் மலையில் உள்ள நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதால் மலையடிவாரத்தில் உள்ள கிராம பகுதிளை நோக்கி மிளாக்கள் கூட்டம் கூட்டமாக வந்து விவசாய பயிர்களை நாசம் செய்வதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். கொட்டாரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பொற்றையடி அருகே இயற்கை எழில் சூழ்ந்த மருந்துவாழ்மலை பகுதி உள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இந்த மலையில் மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மலை அடிவாரத்தில் மந்தாரபுதூர், அச்சன்குளம், பொற்றையடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது விளை நிலங்களில் வாழை, தென்னை, பூ, காய்கறி, மா மரங்கள் உள்ளிட்டவற்றை பயிரிட்டு உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் முக்கிய நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. அதன்படி மருந்துவாழ்மலையில் உள்ள நீர்நிலைகளிலும் தண்ணீரின்றி வறண்டு வருகிறது. இதனால் மலையில் வசிக்கும் மிளாக்கள் தண்ணீரின்றி பாதிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சமீபகாலமாக தண்ணீர், இரை தேடி மிளாக்கள் கூட்டம் கூட்டமாக மலையில் இருந்து இறங்கி அடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்கு வருகின்றன. இவ்வாறு வரும் மிளா விவசாயிகள் பயிரிட்டுள்ள பூச்செடிகள், காய்கறி பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், மருந்துவாழ்மலையில் தற்போது கடும் வெயில் கொளுத்தி வருகிறது. ஆகவே அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை. இதனால் தண்ணீர் தேடி மிளாக்கள் கூட்டம் கூட்டமாக அடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்கு படையெடுத்து வருகின்றன. இப்படி கூட்டம் கூட்டமாக வரும் மிளாக்கள் பயிர்களையும் தின்று சேதப்படுத்துகின்றன. அவற்றை விரட்ட முயன்றாலும் உடனடியாக விரட்ட முடியவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளோம். இதற்கு தீர்வாக வனத்துறையினர் மருந்துவாழ்மலையில் உள்ள சில இடங்களில் தொட்டி அமைத்து தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். தண்ணீர் இருந்தால் மிளா கூட்டம் அடிவாரத்துக்கு வருவது தடுக்கப்படும். மேலும் மிளா கூட்டங்கள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காக்க வேண்டும் என்றனர்.
The post கடும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டன; குமரியில் கிராமங்களுக்கு படையெடுக்கும் மிளா கூட்டம் appeared first on Dinakaran.