போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது எப்படி? பரபரப்பு தகவல்கள்

4 hours ago 2

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியில் பாக். தரப்பு ஆடிப்போய் விட்டது. குறிப்பாக பாக்.கின் முக்கிய ராணுவ நிலைகள் தரைமட்டமாக்கப்பட்டதுடன், தீவிரவாத முகாம்களும் அடியோடு தகர்க்கப்பட்டன. பதிலடி கொடுப்பதாக நினைத்து துருக்கியில் இருந்து வாங்கிய டிரோன்கள், சீனாவிடம் வாங்கிய ஏவுகணைகளை வைத்து பூச்சாண்டி காண்பித்தது பாக். படைகள். ஆனால் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அத்தனையும் சுட்டு வீழ்த்தி விட்டது. ஆனால் இந்தியாவின் டிரோன்கள், ஏவுகணைகள் பாக். இலக்குகளை துல்லியமாக அழித்தன. ஏற்கனவே பாக்.கில் பெரும் நிதி நெருக்கடி. இப்போது போரால் அதிக பொருட் செலவு. ஐஎம்எப் நிதியை வாங்க போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் நிர்பந்தம். இதனால் வேறு வழியின்றி போரை நிறுத்தும் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

இதற்கு அமெரிக்கா, சவுதி ஆகிய நாடுகள் உதவின. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வான்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ ஆகியோர் கடந்த 48 மணி நேரமாக பிரதமர் மோடி, பாக் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாக். ராணுவ தளபதி அசிம் முனீர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அஜித் தோவல் மற்றும் அசிம் மாலிக் ஆகியோருடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் போர் நிறுத்தம் செய்வது என்று முடிவானது. இந்தியா- பாகிஸ்தான் போரில் எங்கள் வேலையில் ஒன்றுமில்லை என்று நேற்று முன்தினம் தான் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார். ஆனால் நேற்று நாங்கள் இருநாடுகளிடமும் நடத்திய நீண்ட இரவு பேச்சால் தான் போர் முடிவுக்கு வந்துள்ளது என்று தெரிவித்தார்.

* இது டிரோன்களின் காலம் புதிய கட்டத்திற்கு மாறும் போர்கள்
இதுவரை வரலாற்றில் யாரும் பயன்படுத்தாத வகையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான 4 நாள் போரில் அதிக அளவிலான டிரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் புதிய கட்டத்தை நோக்கி எதிர்கால போர்கள் மாற்றமடைந்திருப்பதை இது தெளிவாக சுட்டிக் காட்டி உள்ளது. கடந்த 8 முதல் 9ம் தேதி வரையிலான இரவில் மட்டும் பாகிஸ்தான் 400 டிரோன்களை ஏவி உள்ளது. இதை இந்தியா தனது வலுவான வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மூலம் வானிலேயே தகர்த்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்திய பல டிரோன்களின் பாகங்கள் இந்திய எல்லையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில் துருக்கியின் ஆஷிஷ்கார்டு தயாரிப்பான சோங்கர் மற்றும் காமிகேஸ் வகை டிரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

இதில் காமிகேஸ் என்பது தற்கொலை டிரோன்கள் எனப்படுகின்றன. இது குறிவைக்கப்பட்ட இலக்கை சென்றடைந்து, அப்பகுதியில் மேலிருந்து கீழே இலக்கின் மீது விழுந்து வெடித்து சிதறக் கூடியது. தன்னையும் அழித்து, இலக்கையும் அழிப்பதால் இதை தற்கொலை டிரோன்கள் என்கிறோம். இதே போல ஆஷிஷ்கார்டு சோங்கர் வகை டிரோன்கள் இரவிலும், பகலிலும் துல்லிய தாக்குதல் நடத்தக் கூடிய திறன் படைத்தவை. இந்த வகை டிரோன்களைத்தான் பாகிஸ்தான் படைகள் சர்வதேச எல்லையில் இருந்து பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நோக்கி ஏவி, மக்கள் அதிகம் வாழும் குடியிருப்புப் பகுதிகளைத் தாக்க முயற்சித்தது.

இதை நமது வான் பாதுகாப்பு அமைப்புகள் தகர்த்துள்ளன. இதன் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த டிரோன்கள் 3000 மீட்டர் உயரத்தில் பறந்தபடி 5 கிமீ பரப்பளவு வரையிலும் இலக்குகளை தகர்க்கக் கூடியவை. இதில் உள்ள கேமரா மூலம் உடனுக்குடன் இலக்கின் காட்சிகளை பெற முடியும். இந்த டிரோனில் சிறிய வகை இயந்திர துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்ற வெடி பொருட்களை வைத்து ஏவ முடியும். நடுவழியில் சிக்னல் இழப்போ பேட்டரி மிகவும் குறைந்தாலோ மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வரும் வசதிகள் உள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு கடந்த 28ம் தேதி இந்த வகை டிரோன்களை துருக்கி, பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது எப்படி? பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Read Entire Article