‘‘யூனியன் பிரதேசத்தில் பள்ளி சீரமைப்புக்கு நிதி ஒதுக்கியது பள்ளி தலைமைக்கு குஷியாக இருந்தாலும் வலைத்தள விமர்சனத்திற்கு பஞ்சமில்லையாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தென் மாநிலங்களில் கல்வியில் சிறந்து விளங்கும் யூனியனான புதுச்சேரியில் கல்வித்துறை அடுத்தடுத்து வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து வருகிறதாம்.. சமீபத்தில்தான் பழைய கல்விக் கட்டிடங்கள் பழமை மாறாமல் புதிதாக கட்டப்பட்டதாம்.. இருப்பினும் ஒன்றிய பாடத்திட்ட முறைக்கு யூனியன் மாறியுள்ளதால், அரசு பள்ளித் தேர்வு முடிவுகள் குறித்து கல்வித்துறை அச்சத்தில் உள்ளதாம்.. ஏற்கனவே அதன் இயக்குனரான பிரியமானவர் வடமாநிலத்துக்கு பந்தாடப்பட்ட நிலையில், தற்போது கோடை விடுப்பில் அரசு பள்ளிகளை பழுதுநீக்க குறைந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாம்.. இது கைக்கு வந்தவுடன் ஒரு மாதத்திற்குள் சீரமைப்பு பணிகளை முடிக்கவும் உத்தரவு பறந்துள்ளதாம்.. இதனால் பள்ளி தலைமைகள் குஷியில் இருக்கிறார்களாம்.. இந்த தெரு என்ன விலைன்னு சொல்லு… அந்த ஊர் எவ்வளவுன்னு சொல்லு… என்ற கவுண்டமணி- செந்தில் படத்தின் கமெண்ட்களுடன் வலைதளத்தில் விமர்சனங்கள் வைரலாகிறதாம்.. இதுபற்றிதான் ஆசிரிய வட்டாரத்தில் பரவலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஒரு தொகுதியை பிடிக்க இலைக்கட்சி மாஜிக்களுக்குள் முக்கோண மோதல் நடந்துக்கிட்டு இருக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மெடல் மாவட்டத்தின் காராச்சேவு தொகுதியை கைப்பற்ற இலைக்கட்சியில் இப்பவே முட்டல், மோதல் ஆரம்பித்து விட்டதாம்.. இந்த தொகுதி எனக்கு தான் என கடந்த தேர்தலில் இலைக்கட்சி வேட்பாளரான மாஜி சபாநாயகர் தம்பி இப்போதே களத்தில் இறங்கி ஆதரவு திரட்டி வருகிறாராம்.. கடந்த முறை அவர் வெற்றி வாய்ப்பை இழக்க காரணமாக இருந்து, குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட மாஜி வர்ம எம்எல்ஏவும், இம்முறை தொகுதியை பிடித்து விடும் கனவுடன் வைட்டமின் ‘ப’வை தண்ணீராய் செலவழித்து வருகிறாராம்.. இவர்கள் இருவருக்கும் டப் கொடுக்கும் வகையில் மற்றொரு மாஜியான முருக கடவுளின் பெயரைக் கொண்டவரும் சேலத்துக்காரரை சரி செய்யும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம்.. இவர்கள் மூவரும் முக்கோணமாக இருந்து தலைமையிடம் முட்டி வரும் நிலையில், கிழக்கு பக்கத்திற்கு பொறுப்பு வகிக்கும் பழத்தின் பெயரை கொண்ட நிர்வாகி ஒருவரோ, இந்த தொகுதி கூட்டணிக்கு போனாலும் பரவாயில்லை.. ஆனால், இந்த மூன்று பேர் மட்டும் தொகுதி பக்கமாய் வந்து விடக்கூடாது என்று படுகவனமாய் அணி திரட்டி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அல்வா இனிப்பு என்றாலும் தேசியக் கட்சியுடன் மீண்டும் உருவான கூட்டணியால் இலைக்கட்சிக்கு தொகுதி கிடைக்காதது கசப்பு மருந்தாவே நினைக்கிறாங்களாமே நிர்வாகிகள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக் கட்சியும், தேசியக் கட்சியும் இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணி ஏற்படுத்தினாலும், அதை இலைக் கட்சியின் தொண்டர்கள் யாரும் விரும்பவில்லையாம்.. இதற்கு அல்வா மாவட்டத்தில் இருந்து முதல் எதிர்ப்பு குரல் ஒலித்துள்ளதாம்.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, மவுனம் காத்து வந்த ரத்தத்தின் ரத்தங்கள், தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனராம்.. அதாவது ‘அல்வா’ தொகுதியின் எம்எல்ஏ கடந்த 5 தேர்தல்களில் போட்டியிட்டு தொகுதிக்கு என்ன செய்தார், மாவட்டத்திற்கு என்ன பிரயோஜனம், சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார் என இலைக்கட்சி தொண்டர்கள் சேலம்காரருக்கு கடிதம் எழுதி இருக்காங்களாம்.. 2001 முதல் 4 தேர்தல்களில் இலை சின்னத்தில் போட்டியிட்டு, தேசியக் கட்சிக்கு தாவிய பிறகும் 5வது முறையாக இந்த தொகுதியை பறித்துக் கொண்டாரே என்பதுதான் இலைக்கட்சி தொண்டர்களின் கவலை.. 2026 தேர்தலிலாவது இலைக்கட்சியை போட்டியிடச் செய்யலாம் என்ற நினைப்பில் இருந்த தொண்டர்களுக்கு மீண்டும் உருவான கூட்டணி கசப்பு மருந்தையே கொடுத்திருக்காம்.. இந்த முறை அல்வா தொகுதியை இலைக்கட்சிக்கு ஒதுக்கவில்லை என்றால் இலைக்கட்சியே இருக்காது எனச் சொல்கிறது அந்த கடிதம்.. இதுவரை மவுனம் காத்து வந்த இலைக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் ‘புரட்சி’ வெடித்துள்ளதாம்.. இதை தான் எதிர்பார்த்தோம் என அக்கட்சியின் நிர்வாகிகள் பட்டாசு வெடிக்காததுதான் குறையாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘உயர் அதிகாரி சப்போர்ட்டில் எஸ்.ஐ. ஒருத்தர் வசூல் வேட்டையில் புகுந்து விளையாடுகிறாராமே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மான்செஸ்டர் சிட்டியில் 182 ஸ்பாக்கள் செயல்பட்டு வருது.. இதேபோல ரெஸ்டாரன்டுடன் கூடிய பார்களும் அதிகளவில் இருக்கு.. இங்கு நடைபெறும் விதிமீறல்களை கண்டும் காணாமல் இருக்க காக்கி அதிகாரிகளுக்கு மாதந்தோறும் கவனிக்கப்பட்டு வருகிறதாம்.. இது எல்லா இடத்திலும் நடக்கிற வழக்கமான நடவடிக்கை தான். ஆனால் மான்செஸ்டர் சிட்டியில் வசூல் செய்வதற்காக வெளியில் இருந்து எஸ்ஐ ஒருத்தர இறக்கி இருக்கிறார்களாம்.. சரக போலீஸ் அலுவலகத்தில் பணியாற்றும் பிரகாசமான பெயர் கொண்ட எஸ்ஐ தான் வசூலில் கைதேர்ந்தவராக இருக்கிறாராம்.. அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி சிட்டியில் இருக்கும் 182 ஸ்பாக்களிலும் மாதம் தலா ரூ.5 ஆயிரம் கறந்து விடுகிறாராம்.. பார்களிலும் இலக்கு நிர்ணயம் செய்து வசூல் நடக்கிறதாம்.. சிட்டி உயர் அதிகாரி ஒருவருக்கு கொடுக்கணும்னு சொல்லியே வெளிப்படையா வசூலில் ஈடுபடுகிறாராம்.. உண்மையிலேயே வசூல் பணம் எங்கு செல்கிறது, யாருக்கு கைமாறுகிறது என்பது புரியதா புதிராக இருக்கிறதாம்.. சரக லிமிட்டில் பணியாற்றும் எஸ்ஐ எப்படி சிட்டி லிமிட்டிற்குள் வந்து வசூலில் ஈடுபடலாம்னு சிட்டி ஆபீஸில் பெரிய விவாதமே நடந்துகிட்டு இருக்குதாம்.. அதோட இல்லாம சம்பந்தப்பட்ட எஸ்ஐ எந்நேரமும் சிட்டி ஆபீஸில்தான் முழுமையா இருந்துட்டு அதிகாரத்தை செலுத்திட்டு வருகிறாராம்.. இதை சரக ஆபீஸில் இருக்கிறவர்களும் கண்டுகொள்வதில்லையாம்.. சிட்டி உயர் அதிகாரி ஒருவரின் சப்போர்ட் முழுமையா இருக்கிறதால பிரகாசமான எஸ்ஐ வசூல் வேட்டையில் புகுந்து விளையாடி வருகிறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post ஒரே தொகுதியை கைப்பற்ற மாஜிகளுக்குள் நடக்கும் மோதலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.