போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் இந்தியா மீது பாக். மீண்டும் தாக்குதல்: எல்லையோர கிராமங்களில் குண்டுவீச்சு ; 4 மாநிலங்களில் பதற்றம்

3 hours ago 2

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக நடந்த போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பிலும் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக போர் நிறுத்த அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரத்திலேயே காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் எல்லையோர பகுதிகளில் ஏவுகணை, டிரோன்கள் மூலம் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொடூர தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான தூதரக உறவை பெரிதும் குறைத்த இந்தியா, எல்லைகளை மூடியது. இருதரப்பு வர்த்தகத்தை முழுமையாக நிறுத்தியதோடு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து கடும் நடவடிக்கை எடுத்தது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து, எல்லையில் போர் ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டது. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவிய நிலையில், கடந்த 7ம் தேதி இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் 9 தீவிரவாத தளங்கள் மீது ஏவுகணை ஏவியும், போர் விமானங்கள் மூலம் குண்டுவீசியும் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி, டிரோன்களை ஏவி இந்தியாவின் குடியிருப்பு பகுதிகளையும், ராணுவ தளங்களையும் தாக்க முயற்சித்தது. ஆனாலும் எஸ்-400 உள்ளிட்ட வலுவான வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இந்திய ராணுவம் வானிலேயே தகர்த்து பதிலடி கொடுத்தது.

அதே சமயம் எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லையோர கிராமங்களை குறிவைத்து சிறிய பீரங்கி குண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். 400க்கும் மேற்பட்ட டிரோன்களை இந்தியாவின் 26க்கும் மேற்பட்ட நகரங்களை குறிவைத்து ஏவினர். இதனால் காஷ்மீர், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலத்தில் எல்லையோர மக்கள் மத்தியில் போர் பீதி ஏற்பட்டது. 4வது நாளாக நேற்றும் காஷ்மீரின் நகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் அனுப்பிய டிரோன்களை இந்தியா தகர்த்தது.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென ஜி7 நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. இந்த அமைப்பில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 நாடுகளும் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்தியாவும், பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையை தீவிரமாக்கினால் பிராந்திய நிலைத்தன்மைக்கு ஆபத்து ஏற்படும் என வலியுறுத்தின. அதே போல, சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சர் அல் ஜூபைர் அறிவிக்கப்படாத பயணமாக கடந்த 8ம் தேதி இந்தியாவுக்கு வருகை தந்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த நாள் இஸ்லாமாபாத் சென்ற அவர், இருதரப்பு தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென பாகிஸ்தானிடம் வலியுறுத்தினார்.

இதுதவிர, அமெரிக்காவும் இந்தியா, பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தியது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சூழலில் 4வது நாளாக நேற்றும் போர் நீடித்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்த முடிவு எட்டப்பட்டிருப்பதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கான பொது இயக்குநர் (டிஜிஎம்ஓ) இன்று (நேற்று) மாலை 3.35 மணிக்கு இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான பொது இயக்குநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதில், போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பிலும் சம்மதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (நேற்று) மாலை 5 மணியுடன் நிலம், வான், கடல் மார்க்கமாக நடந்த அனைத்து தாக்குதல்களும் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருதரப்பிலும் இருந்தும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இருநாட்டு ராணுவ டிஜிஎம்ஓக்கள் இடையே வரும் 12ம் தேதி (நாளை) நண்பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை நடக்கும்’’ என்றார்.

மிஸ்ரியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சில மணி நேரங்கள் முன்பாகவே, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் போர் நிறுத்தம் குறித்து தகவல் வெளியிட்டார். அவர் தனது பதிவில், ‘‘அமெரிக்கா நடத்தியா நீண்ட நேர மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தியதற்கு நன்றி’’ என்றார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் ஆகியோருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தை நடத்திய பிறகு டிரம்ப் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டார். டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் ரூபியோ வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘கடந்த 48 மணி நேரத்தில், துணை அதிபர் வான்சும், நானும் இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அஜித் தோவல் மற்றும் அசிம் மாலிக் உள்ளிட்ட மூத்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம். இதில், இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. இருதரப்பு பிரச்னைகள் குறித்து நடுநிலையான இடத்தில் பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என்பதையும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமைதிப் பாதையை தேர்ந்தெடுத்த பிரதமர்கள் மோடி, ஷெரீப்பை பாராட்டுகிறோம்’’ என்றார்.

இதே போல, இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தினார். அவர் அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது. பாகிஸ்தான் நேரப்படி இன்று (நேற்று) மாலை 4:30 மணி முதல் போர் நிறுத்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்’’ என்றார்.

இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக நிலவி வந்த போர் பதற்றம் தணிந்தது. இந்த போர் நிறுத்தத்தை இரு நாட்டு எல்லையோர மக்களும் வரவேற்றுள்ளனர். பாகிஸ்தான் மக்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடினர். இந்தியாவிலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் போர் நிறுத்தத்தை வரவேற்றனர். ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டரஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வரவேற்பு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால், இந்த அமைதி சில மணி நேரங்களே நீடித்தது. இரவு 9 மணி அளவில் காஷ்மீரின் பல பகுதிகளில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தகவல் வெளியிட்டார். அவர் தனது எக்ஸ் பதிவில், ‘‘போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட பிறகும் தாக்குதல் நீடிக்கிறது. நகர் முழுவதும் குண்டு சத்தங்கள் கேட்கின்றன’’ என்றார். உதம்பூர், அக்னூரில் எல்லைப் பகுதியில் துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டுள்ளன. இதனால் உதம்பூரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சர்வதேச எல்லை, எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன. பாராமுல்லாவில் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. சோப்பூரில் வெடிகுண்டு சத்தம் கேட்டதாக தகவல்கள் கூறின.

ஜம்முவில் 10க்கும் மேற்பட்ட டிரோன்கள் பறந்துள்ளன. இதனால் காஷ்மீரில் மீண்டும் ஏர் சைரன் எச்சரிக்கைகள் இயக்கப்பட்டன. ராஜஸ்தானின் பார்மரில் ஏர் சைரன்கள் எச்சரிக்கை ஒலித்ததால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குஜராத்தின் புஜ் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலத்திலும் எல்லையோர கிராமங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய வான் வெளியில் டிரோன்கள் வந்தால் அதை சுட்டுத்தள்ள எல்லை பாதுகாப்பு படைக்கு ஒன்றிய அரசு முழு அனுமதி தந்துள்ளது. உதம்பூரில் பாகிஸ்தான் டிரோன்கள் இடைமறித்து வானிலேயே தகர்க்கப்பட்டன. இதனால், இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் முடிவுக்கு வருமா என்பதும் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சார்பில் வெளியிட்டுள்ள பதிவில்,’தீவிரவாதிகளுக்கு எதிரான செயல்பாடுகள் தொடரும்; போர் நிறுத்தத்துக்கு முன்பும் பின்பும் எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. இருநாடுகளுக்கும் இடையேயான மோதலை நிறுத்துவதற்கான புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. எனினும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது தொடரும்’ என்று அறிவித்துள்ளது.

விமான படையின் பெண் பைலட் சிறைபிடிக்கப்பட்டாரா? ஒன்றிய அரசு மறுப்பு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து விமான நிலையங்கள் மூடல், விமான படையின் பெண் பைலட் சிறை பிடிப்பு என சமூக வலைதளங்களில் வெளியான தகவல் உண்மை இல்லை என்றும் போலி செய்தி என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆபரஷேன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து விமான படையின் விமானங்கள் நொறுங்கி விழுந்தது, பெண் பைலட் சிறைப்பிடிப்பு, விமான நிலையங்கள், ஏடிஎம்கள் மூடல், சைபர் தாக்குதல்கள், மின்சார கட்டமைப்பில் கோளாறு உள்பட பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இவை அனைத்தும் போலியான செய்திகள் என்று ஒன்றிய அரசு மறுத்துள்ளது.

அமெரிக்கா அறிவித்தது ஏன்? காங். கேள்வி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்காவிடம் இருந்து போர் நிறுத்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. எனவே இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். அதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி விளக்கம் அளிக்க வேண்டும். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி மக்களுக்கும் விவரங்களை தெரியப்படுத்த வேண்டும்’’ என்றார்.

விக்ரம் மிஸ்ரி

  • ஏப்.22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
  • மே 7ஆம் தேதி அதிகாலையில் பாக். தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
  •  இதனால் கடந்த 4 நாட்களாக இருநாடுகள் இடையே கடும் போர் வெடித்தது.

எந்த தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்
பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், ‘‘இந்தியாவில் எதிர்காலத்தில் நடக்கும் எந்த தீவிரவாத சம்பவமும், நாட்டிற்கு எதிரான போராகவே கருதப்படும். அதன் அடிப்படையிலேயே பதிலடியும் தரப்படும்’’ என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அரசு அறிக்கை வெளியிடவில்லை. எனினும் பாகிஸ்தானுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

The post போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் இந்தியா மீது பாக். மீண்டும் தாக்குதல்: எல்லையோர கிராமங்களில் குண்டுவீச்சு ; 4 மாநிலங்களில் பதற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article