
சென்னை,
'பசங்க' படத்தின் மூலம் அறிமுகமான விமல், எழில் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு 'தேசிங்குராஜா' என்ற படத்தில் நடித்திருந்தார். நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 'தேசிங்கு ராஜா 2' முதல் பாகத்தில் இருந்து வித்தியாசமான கதைக்களத்திலும் முதல் பாகத்தைபோல் காமெடி கலந்த கதைக்களத்திலும் தயாராகி உள்ளது.
இன்பினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் வருகிற ஜூலை 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லரும் கலாட்டா காமெடியுடன் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. இதில், விமல், குக் வித் கோமாளி புகழ் பெண் வேடத்தில் போலீசாக நடித்துள்ளனர். காவல் நிலையத்திற்குள் நடக்கும் அட்ராசிட்டியை காமெடியுடன் இயக்குநர் எழில் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரங்கஸ்தலம் படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதாவும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இவர்களோடு சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில், 'தேசிங்கு ராஜா 2' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் புகழ், "வருமானத்துக்காக விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை அழிக்காதீர்கள். ஒரு படத்தை எடுக்க அவ்வளவு கஷ்டப்படுகிறோம். நடிப்பு நன்றாக இல்லை என்று மக்கள் சொன்னால், நிச்சயம் எங்களை நாங்கள் மாற்றிக் கொள்கிறோம். ஒரு படத்தை எடுக்க மிகவும் கஷ்டப்படுகிறோம். எல்லோரும் நல்ல படங்களை கொடுக்கவே முயற்சிக்கிறார்கள். விமர்சனத்தால் ஒட்டு மொத்த உழைப்பும் வீணாகிவிடுகிறது " என்று தெரிவித்தார்.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் திரை விமர்சகர்களை தயாரிப்பாளர் முதல் இயக்குநர்கள் வரை கடுமையாக சாடி வருகின்றனர். திரை விமர்சகர்களால் சினிமாவிற்கு பேராபத்து ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழந்துள்ளது. விமர்சனம் என்பது தனிமனித கருத்து சுதந்திரம், அதில் யாரும் தலையிட முடியாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அண்மையில் இயக்குநர் பாலா 'பறந்து போ' படத்தின் விழாவிலும் திரை விமர்சர்களின் பாதம் தொட்டு வேண்டுகிறேன் என தெரிவித்தார். அவரை தொடர்ந்து நடிகர் புகழ் சினிமாவை அழித்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார்.