
சென்னை,
சென்னை மாநகரில் போதைப் பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், வார இறுதி நாட்களில் நட்சத்திர ஓட்டல்களில் கொகைன் போதைப்பொருட்களுடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைகட்டுவதாக தகவல்கள் பரவிவந்தன.
இதனையடுத்த போலீலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில், கொகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சிக்கினார்கள். இவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக பிரதீப், கெவின் ஆகிய 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழ் நடிகர்-நடிகைகள் பலருக்கு அவர்கள் போதைப்பொருட்களை சப்ளை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. தற்போது, போதைப்பொருள் வழக்கில் முன்னணி தமிழ் நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட காலமாக கதாநாயகியாக நடித்து வரும் அந்த நடிகை இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, அந்த நடிகைக்கு போலீசார் வலை விரித்துள்ளனர். அவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, போதைப்பொருட்களை விற்பனை செய்த பிரதீப், கெவின் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கு அனுமதி கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கும்போது, குறிப்பிட்ட முன்னணி நடிகை மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்த பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.