சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று வனம் மற்றும் கதர்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்து பேசி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:
* வனப் பாதுகாப்பு, தீ மேலாண்மை, வன உயிரினங்கள் கணக்கெடுப்பு, வனஉயிரினங்கள் பாதுகாப்பு மற்றும் மனித வன உயிரின மோதலை தவிர்ப்பது குறித்து மாணவர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளித்து, இத்திட்டத்தின் மூலம் இளம் 20,000 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இளம் இயற்கை காவலர்கள் என்ற சான்றிதழ் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.3 கோடி ஒதுக்கப்படும்.
* சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட கடல் பகுதிகளில் ரோந்து செல்வதற்கும், சட்டவிரோத கடல்வாழ் உயிரின வேட்டையைத் தடுப்பதற்கும், கடல்வளப் பாதுகாப்பை திறம்பட மேற்கொள்ளுவதற்கும் ஒரு கடல்சார் உயரடுக்கு படை சென்னையில் உருவாக்கப்படும்.
* பாதுகாப்பு மற்றும் பரிணாம மரபியல் மையம் ஒன்றும், உயிர்வகை வாழ்வு மையம் ஒன்றும் சென்னை வண்டலூரில் உள்ள உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில் புதியதாக ரூ.1.50 கோடி செலவில் அமைக்கப்படும்.
* வனம் மற்றும் இயற்கை பாதுகாப்பில் மாணவர்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் வனத்துறையின் மூலம் 1000 இயற்கை முகாம்கள் ரூ.2 கோடி செலவில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும்.
* சென்னை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் கோவை போன்ற பெரு நகரங்களில் சுற்றுப்புறங்களில் உள்ள வனங்கள் நகர்மயமாதலால் பெருமளவில் சிதைவுக்குள்ளாகி உள்ளன. இவற்றை மீட்டெடுக்க ஆதிவனம் மேம்பாட்டுத் திட்டம் ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
The post கடல்வளப் பாதுகாப்பை திறம்பட மேற்கொள்ள கடல்சார் உயரடுக்கு படை சென்னையில் உருவாக்கம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு appeared first on Dinakaran.