இறந்த உடலுடன் மறியலில் ஈடுபடுவதை தடுக்க சட்டம்: தமிழ்நாடு அரசுக்கு காவலர் ஆணையம் பரிந்துரை

1 day ago 4

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி இறந்த உடலுடன் சாலைகளில் மறியல் செய்வதை தடுக்க உரிய சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான போலீஸ் கமிஷன் (காவலர் ஆணையம்) பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் காவலர்களின் குறைகள் மற்றும் காவலர்களுக்கான நலத்திட்டங்கள், காவலர் பணி சேர்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருவதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் காவல் ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் அடிப்படையில் காவல் ஆணையம் கடந்த 2022ல் அமைக்கப்பட்டது.
இந்த குழு காவல்துறையினரின் பிரச்னைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து கடந்த ஜனவரி 3ம் தேதி முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், உடனடி நடவடிக்கை, இழப்பீடு போன்ற கோரிக்கைகளுடன் இறந்த உடல்களுடன் சாலைகளில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதை தடுப்பதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இறந்த உடல்களுடன் சாலைகளில் போராட்டம் நடத்துவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. இதேபோல் போராட்டம் நடத்துவதை தடுப்பதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் ‘ராஜஸ்தான் இறந்த உடல் மரியாதை சட்டம்’ கடந்த 2023ல் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி இறந்த உடல்களுடன் சாலையில் போராட்டம் நடத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க முடியும். இறந்து போனவர்களுக்கு தரக்கூடிய இறுதி மரியாதையை இந்த சட்டம் உறுதி செய்யப்படுகிறது. இறந்துபோனவரின் உடலுக்கு உரிமை கொண்டாட உறவினர்கள் முன்வரவில்லை என்றால் அரசு தரப்பில் அந்த உடலுக்கு இறுதி சடங்கை செய்ய வேண்டும் என்றும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்ற சட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும் என்றும் போலீஸ் கமிஷனின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டப் பிரிவு 163ன்படி போராட்டம், கலகம் விளைவிப்பவர்களை தடுக்க வேண்டும். இல்லையென்றால் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே, இதுதொடர்பான சட்டத்தை கொண்டுவருவது அவசியம் என்றும் போலீஸ் கமிஷன் தனது பரிந்துரையில் கூறியுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டத்தை தமிழ்நாட்டிலும் கொண்டுவர வேண்டும் என்று காவல்துறை வட்டாரங்களிலும் பேசப்படுகிறது.

The post இறந்த உடலுடன் மறியலில் ஈடுபடுவதை தடுக்க சட்டம்: தமிழ்நாடு அரசுக்கு காவலர் ஆணையம் பரிந்துரை appeared first on Dinakaran.

Read Entire Article