சென்னை: வங்கக் கடலில் வெப்ப நீரோட்டம் அதிகரித்துள்ளதால் ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி மே மாத இறுதி வரையில் மாறி மாறி கோடை மழை கொட்டும் மற்றும் வெயில் கொளுத்தும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்துள்ளது. உள் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 102 டிகிரி வெயிலும், வட தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 98 டிகிரி வெயிலும் நிலவியது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. நீலகிரியில் அதிகபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்பட்டது. தஞ்சாவூர், கோவை, மதுரை, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெப்ப நிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை ெகாண்டுள்ளது. அதன் காரணமாக இன்று முதல் 5ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் இன்று இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும். 2ம் தேதி முதல் 4ம் தேதி வரையில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட சற்று குறைந்து காணப்படும். ஏப்ரல், மே மாதங்களில் மாறி மாறி வெயில் கொளுத்தும் மற்றும் கோடை மழை வெளுத்து வாங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கோடை என்றால் வழக்கமாக அனல் மற்றும் வெயில் இருக்கும். கோடை காலத்தில் ஒரே ஒரு புயல் மட்டும் உருவாகும் என்பது வழக்கம். அந்த புயல் எப்போதும் வடக்கு மற்றும் வட மேற்கு திசையில்தான் நகர்ந்து ஆந்திர பகுதி மற்றும் ஒடிசா, மேற்குவங்கம் வழியாக சென்று மியான்மரில் கரையை கடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோடை மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 2ம் தேதி வெப்பசலனம் காரணமாகவும் இரு காற்றின் இணைவு காரணமாகவும் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 2ம் தேதி மதியத்துக்கு பிறகு தொடங்கும் இடி மின்னல் மழை இரவுக்கு பிறகு கடலோர மாவட்டங்களிலும், நள்ளிரவுக்கு பிறகு 3ம் தேதி அதிகாலையில் இருந்து அனைத்து மாவட்ட கடலோரப் பகுதிகளிலும் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி கன்னியாகுமரி வரையும் மழை பெய்யும். பின்னர் மதியத்துக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் கர்நாடகாவிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக ஆந்திராவிலும் மழை பெய்யும். இந்த நிலை 7ம் தேதி வரை தொடரும்.
8ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படும் வாய்ப்புள்ளதால் அதற்கு பிறகு அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும். இந்த மழை விட்டுவிட்டு பெய்யும். இது அண்டை மாநிலங்களிலும் மழை பெய்வதற்கான சாதகத்தை உருவாக்கியுள்ளது. 12ம் தேதி அடுத்த காற்று சுழற்சி உருவாகி நல்ல மழை பெய்யும். அதற்கு பிறகு 22ம் தேதி தொடங்கி ஏப்ரல் இறுதிவரை மழை பெய்யும். இடையில் சில நாட்கள் வெயில் நிலவும். மே 2ம் தேதிக்கு பிறகு மீண்டும் மழை பெய்யும். இது மே 12ம் தேதி வரை நீடிக்கும். மே மாதம் கோடை மழை நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கோடை காலத்தில் வெயிலும் அதிக அளவில் இருக்கும். அதே நேரத்தில் கோடை மழையும் அதிக அளவில் பெய்யும் நிலையை இயற்கை உருவாக்கி இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காரணம் என்ன?
கார்பன் வெளியேற்றம், வெப்பத்தின் உயர்வு, புவி வெப்பமயமாதலால் ஓசோன் ஓட்டை போன்ற பிரச்னைகளால் ஆக்சிஜன் குறைந்து புற ஊதா கதிர்கள் பூமியை தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பூமி மற்றும் கடல் பகுதியில் தாக்குவதால் வெப்பத்தை கடல் உள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடல் வெப்பம் குறைவாக இருப்பதற்கு பதிலாக 30 டிகிரி செல்சியஸ் வரையில் உயர்ந்து கொண்டே ேபாகிறது. அத்துடன் கடல் நீரோட்டமும் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் இதுபோன்ற கடல் நீரோட்டம் என்பது பசிபிக் பெருங்கடல் போன்ற பெருங்கடற் பகுதியில் தான் இருந்தது. ஆனால் தற்போது வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளிலும் வலுவான நீரோட்டங்கள் உருவாகிவிட்டன. இந்த நீரோட்டங்கள் வெப்பத்தை கடத்தும் ஒரு காரணியாக இருக்கிறது. அதாவது வெப்பமான பகுதியில் இருந்து வெப்பம் இல்லாத பகுதிக்கு இந்த நீரோட்டங்கள் வெப்பத்தை கடத்துகின்றன. இதனால் கடல் வெப்பம் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக ஆந்திரா, தமிழ்நாடு இலங்கையை ஒட்டிய கடல் பகுதியல் கடுமையான நீரோட்டம் நிலவுகிறது. காற்று சுழற்சி போன்ற நிகழ்வுகள் உருவாக இதுபோன்ற வெப்ப நீரோட்டங்கள் சாதகமாக இருக்கின்றன. அதனால் தமிழகத்தை நோக்கி நிகழ்வுகள் வருகின்றன. சில நேரங்களில் உயர் அழுத்தம் ஏற்பட்டு சில நேரங்களில் காலையில் கடுமையான பனிப்பொழிவும் இருக்கும். நீரோட்டம் வலிமையாக இருப்பதால் கடல் அதிக அளவில் வெப்பம் அடைந்துள்ளது. அதனால் மே மாதத்தில் அதிக அளவில் காற்று சுழற்சி ஏற்பட்டு மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
The post ஏப்ரல், மே-யில் வெயில் கொளுத்தும், மழை கொட்டும்: வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு appeared first on Dinakaran.