கடலூரில் பட்டப்பகலில் பயங்கரம் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வெட்டி கொலை

1 month ago 6

கடலூர், டிச. 13: கடலூர் வண்டிப்பாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளரை, பட்டப்பகலில் கத்தியால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிப்பாளையம் சிவா நகரை சேர்ந்தவர் தேவிசந்திரன் மகன் ராஜேந்திரகுமார்(39). இவருக்கு ரேகா என்ற மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடலூர் மாநகர காங்கிரஸ் கட்சி பொருளாளரான ராஜேந்திரகுமார் கடலூர் வண்டிப்பாளையம் பைபாஸ் சாலையில் உள்ள தண்டபாணி நகரில் குமரன் டிரேடர்ஸ் என்ற பெயரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். இந்த கடையில் மூன்று வாலிபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் கடையை திறந்த ராஜேந்திரகுமார், கடையில் வேலை பார்த்த மூன்று வாலிபர்களையும் வேலை விஷயமாக வெளியே அனுப்பி உள்ளார். வழக்கம் போல் கடையில் வியாபாரம் நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் வெளியே சென்ற மூன்று வாலிபர்களும் மீண்டும் சுமார் மதியம் 12 மணி அளவில் கடைக்கு வந்துள்ளனர். அப்போது ராஜேந்திரகுமார் கழுத்தில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர்கள், இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராமன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் ராஜேந்திரகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தண்டபாணி நகர் பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேந்திரகுமார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் பட்டப்பகலில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கடலூரில் பட்டப்பகலில் பயங்கரம் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வெட்டி கொலை appeared first on Dinakaran.

Read Entire Article