
தூத்துக்குடி,
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் மீன்களின் வரத்து குறைந்தது. இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென்று உயர்ந்தது. ஒரு கிலோ சீலா மீன் ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி வரை 61 நாட்கள் அமலில் உள்ளது. இதையொட்டி தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்கள் விசைப்படகுகளில் உள்ள பழுதுகளை நீக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டுப்படகு மீனவர்கள், பைபர் படகு மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் பிடித்து வரும் மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இவர்கள் பிடித்து வரும் மீன்கள் போதுமானதாக இல்லை என்பதால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப்படகு, பைபர் படகு மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் காரணமாக போதிய மீன்பாடு கிடைக்கவில்லை.
இதனால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. எனினும் அங்கு மீன்கள் வாங்குவதற்காக ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்ததால் மீன்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்தது.
கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.1300 முதல் 1500 வரை விற்பனையான சீலா மீன் நேற்று ரூ.1600-க்கு விற்பனையானது. அதுபோல் விளை மீன், ஊளி, பாறை மீன்கள் கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரையும், நண்டு கிலோ ரூ.800 வரையும், நகரை மீன் கிலோ ரூ.500 வரையும், கேரை மீன் கிலோ ரூ.300 வரையும், சூரை மீன் கிலோ ரூ.250 வரையும், வங்கனை மீன் ஒரு கூடை ரூ.1750 வரையும் விற்பனையானது.
சாளை மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டதால் ஒரு கூடை ரூ.1500 முதல் ரூ.1800 வரை விற்பனையானது. மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையிலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.