திருவள்ளூர், மே 10: கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் ஊராட்சி நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதை ஆசாமிகள் அட்டகாசம் செய்வதாக பாதிக்கப்பட்ட பெண்கள் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், தங்களது குடியிருப்பு பகுதியில் சிசிடிவி அமைக்க வேண்டும், என்று கோரிக்கைவிடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் ஊராட்சியில் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இவர்களில் பெரும்பாலானோருக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக இரவு நேரங்களில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் அட்டகாசத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. பெண்கள், சிறுமிகள் அவ்வழியாக செல்லும்போது கேலி, கிண்டல் செய்வதும், கையை பிடித்து இழுப்பதும் போன்ற அராஜக செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கிராமத்தை சேர்ந்த சில பெண்கள் நரிக்குறவர் இன பெண்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர். நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். கஞ்சா போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகார் மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் ஊராட்சி நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதை ஆசாமிகள் அட்டகாசம்: எஸ்.பி அலுவலகத்தில் பெண்கள் புகார் appeared first on Dinakaran.