வருசநாடு, நவ. 18: கடமலை-மயிலை ஒன்றியத்தில் அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், கடமலைக்குண்டுவில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ஜெயபாரதி, வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ், கலெக்டரின் வேளாண் துறை நேர்முக உதவியாளர் வளர்மதி, நுகர்வோர் வாணிபக் கழக மேலாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் யானைகள் நடமாட்டம், சாலை வசதி, எலிகளால் பயிர்கள், சேமிப்புப் பொருட்கள் சேதம், உரத் தேவை குறித்து பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். பின்னர் கலெக்டர் பேசுகையில், “மலையடிவாரப் பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், விவசாயிகளையும், விளைநிலங்களையும் பாதுகாப்பதற்கும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்.
கிடப்பில் வருசநாடு காமராஜபுரம் கிழவன் கோயில் மலைச்சாலை திட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். கடமலை-மயிலை ஒன்றியத்தில் அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கவும், தேவைப்படும் இடங்களில் சிமெண்ட் சாலைகள், தார்ச்சாலைகள் அமைக்கவும் அதிகாரிகள் ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும்’’ என்றார்.
The post கடமலை-மயிலை ஒன்றியத்தில் அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படும்: கலெக்டர் ஷஜீவனா தகவல் appeared first on Dinakaran.