கடமலை – மயிலை ஒன்றியத்தில் அனைத்து கண்மாய்களையும் விரைந்து தூர்வார வேண்டும்: விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

1 month ago 3

 

வருசநாடு, டிச. 9: கடமலை – மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் தூர்வார வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை – மயிலை ஒன்றியத்தில் பெரியகுளம் கண்மாய், வருசநாடு பஞ்சந்தாங்கி கண்மாய், கெங்கன்குளம், அம்மாகுளம், கடமான்குளம், கோவிலாங்குளம், செங்குளம், கோவில்பாறை கண்மாய், புதுக்குளம் உள்பட 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.

கண்மாய் பாசனத்தை நம்பி ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இந்த கண்மாய்கள் தூர்வாரப்படாமல் கருவேல மரங்கள் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் அவற்றில் போதிய அளவில் தண்ணீரை தேக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் தூர்வார வேண்டும் என கோரி கடமலை – மயிலை ஒன்றிய பகுதி விவசாயிகள் பலமுறை அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்தனர்.

இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை ஏற்காமல் ஒரு சில கண்மாய்களின் கரைகளை மட்டும் பலப்படுத்தப்பட்டு இருப்பதாக, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘பலமுறை கண்மாய் பணிகள் மேற்கொள்ள சர்வே கற்களை ஊன்றினர். ஆனால் அதன்பிறகு வேலைகள் எதுவும் நடக்கவில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னையை கண்டு கொள்ளாமல் உள்ளனர். கண்மாய்களை முறையாக தூர்வாரி, கரைகளை பலப்படுத்தினால் போதிய அளவில் மழைநீரை தேக்கலாம். இதனால் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதுடன், நிலத்தடி நீரூமட்டமும் உயரும். மேலும் பொதுமக்களுக்கு எப்போதும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாது. எனவே இப்பகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களையும் உடனடியாக தூர்வார வேண்டும்’’ என்றனர்.

The post கடமலை – மயிலை ஒன்றியத்தில் அனைத்து கண்மாய்களையும் விரைந்து தூர்வார வேண்டும்: விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article