கடந்த ஆட்டங்களில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம் - ரஹானே பேட்டி

5 days ago 5

கொல்கத்தா,

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 80 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் வெற்றிக்கு வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா தலா 3 விக்கெட் வீழ்த்தி உதவினர். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வைபவ் அரோராவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் கொல்கத்தா கேப்டன் ரஹானே அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே இந்த வெற்றி எங்களுக்கு மிக முக்கியமான ஒன்று. அதிலும் இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த போட்டியின் போது ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்ததால் முதல் 6 ஓவர்கள் வரை மேலும் எந்த விக்கெட்டையும் இழக்காமல் விளையாட வேண்டும் என்று நினைத்தோம்.

அதேபோன்று விளையாடி, கடைசி கட்டத்தில் விக்கெட்டுகள் கையில் இருந்ததால் எங்களால் பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்ல முடிந்தது. வெங்கடேஷ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றனர். கடைசி இரண்டு போட்டிகளாக நாங்கள் பேட்டிங்கில் செய்த சொதப்பலே தோல்விக்கு காரணமாக அமைந்தது. கடந்த ஆட்டங்களில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம்.

இந்த போட்டியில் 170 முதல் 180 ரன்கள் வரை அடித்தாலே வெற்றிக்கு போதுமான ரன்களாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அதை விட அதிகமாக ரன்கள் வந்ததில் மகிழ்ச்சி. இந்த போட்டியின் போது சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். அதேபோன்று வைபவ் அரோரா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் போட்டியின் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களுக்கு போட்டியில் சாதகத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article