
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் குருமித்கல் பகுதியை சேர்ந்தவர் பலராமன் (வயது 27). இவர் சுராபுரா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் குருமித்கல்லை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
அவ்வப்போது பலராமன், திருமண ஆசைக்காட்டி அந்த சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானதும், மாத்திரை கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெண்ணுக்கு 18 வயது நிறைவடைந்தது. அந்த பெண் திருமணம் செய்துகொள்ளுமாறு பலராமனை வலியுறுத்தி வந்துள்ளார்.
இந்த விவகாரம் பலராமனின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் பலராமனை கண்டித்ததுடன் இளம்பெண்ணை சந்திக்கக்கூடாது என்று எச்சரித்தனர். பெற்றோரின் பேச்சை கேட்ட பலராமன், பெண்ணை சந்திப்பதை நிறுத்திவிட்டார். மேலும் செல்போனிலும் தொடர்பு கொண்டு பேசவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பெண், பலராமனை நேரில் சந்தித்து விசாரித்தார். அப்போது அவர், உன்னை திருமணம் செய்ய முடியாது. பெற்றோர் பார்க்கும் பெண்ணைதான் திருமணம் செய்ய இருப்பதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் குருமித்கல் மகளிர் போலீசில் பலராமன் மீது பலாத்கார புகார் அளித்தார். மேலும் திருமண ஆசைக்காட்டி பலாத்காரம் செய்துவிட்டு தற்போது ஏமாற்றிவிட்டதாகவும் கூறினார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான பலராமனை போலீசார் தேடி வருகின்றனர்.