கடந்த 3 நாட்களில் ரூ.1,440 உயர்வு ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை: நகை வாங்குவோர் அதிர்ச்சி

1 month ago 4

சென்னை: கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி அன்று யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை வாங்க முடியுமா என அச்சம் அடைந்தனர். பண்டிகை நேரத்தில் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் விலை உயர்வால் வாங்க முடியாமல் தவித்தனர். ஆனால், நவம்பர் 1ம் தேதி முதல் தங்கத்தின் விலை அதிரடியாக சரிய தொடங்கியது.

கடந்த 2 வாரத்தில் ரூ.4ஆயிரம் அளவுக்கு தங்கம் விலை குறைந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் ஜாக்பாட் அடித்தது போன்று பழைய நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் நகைகளை வாங்க தொடங்கினர். பல நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதியது. தங்கம் விலை குறைவிற்கு அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. எனவே தற்போது குறைந்துள்ள தங்கத்தின் விலை எந்த நேரமும் மீண்டும் உயரும் என கூறப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் சரசரவென சரிந்த தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,520க்கு விற்பனையானது. தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,115க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ.56,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த வாரம் தொடர்ச்சியாக 3 நாள் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.1440 உயர்ந்துள்ளது நடுத்தர மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post கடந்த 3 நாட்களில் ரூ.1,440 உயர்வு ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை: நகை வாங்குவோர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article