சென்னை: இந்தியாவின் மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 37.1 விழுக்காட்டுடன் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. கடந்த 11 மாதங்களில் 12.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற, இந்திய தொழில் கூட்டமைப்பின் இந்திய நகரங்களில் வாழக்கூடிய சூழல்களை உருவாக்குவது குறித்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சியில், தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தியாவிலேயே, இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் உற்பத்தித் துறை மொத்த மதிப்புக் கூட்டலில், தமிழ்நாடு 12.11 விழுக்காடு பங்களிப்பு செய்கிறது. கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு 8 விழுக்காட்டுக்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சி கண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்தன்மை வாய்ந்தது. இந்த வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் வகையில், 2030ம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டை 1 டிரில்லியன் பொருளாதார மாநிலமாக உயர்த்திட ஒரு உயரிய இலக்கு நிர்ணயித்து, அந்தப் பாதையில் பயணித்து வருகிறோம்.
பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல. எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. சமூகநீதியை உள்ளடக்கிய வளர்ச்சி. பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் போன்ற கொள்கைகளை அடித்தளமாக கொண்ட ஒட்டுமொத்த வளர்ச்சியை எங்களுடைய இலக்காக கொண்டிருக்கிறோம். இதனால்தான், தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து தனித்து விளங்குகிறது. நம்முடைய தமிழ்நாடு, நகர்ப்புற மக்கள்தொகை அதிகம் கொண்ட மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலம் மட்டுமல்ல, மிகவும் தொழில் மயமாக்கப்பட்ட மாநிலம். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள், தமிழ்நாட்டில் தான் இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை கொண்டுவர நாங்கள் எடுத்து வரும் முயற்சிகள் பலன் அளித்து வருகிறது. கோயம்புத்தூர், திருச்சி, ஓசூர், மதுரை, சேலம், தூத்துக்குடி போன்ற நகரங்களும் பொருளாதார சக்திகளாக உருவெடுத்திருக்கிறது. நம்முடைய வளர்ச்சியை எடுத்துக்காட்டுவது போன்ற செய்திகளை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தியாவின் மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 37.1 விழுக்காட்டோடு தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
அதுவும் கடந்த 11 மாதங்களில் 12.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களான, பாக்ஸ்கான், வின்பாஸ்ட், செம்ப்கார்ப், கார்னிங் தங்கள் உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்க முன்வந்திருப்பதே, இதற்கு ஒரு சான்று. அதுமட்டுமல்ல, நிலைத்தன்மை நடவடிக்கைகள் மேற்கொள்வதில், தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
தொழில் துறைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, பல்வேறு திட்டங்களை, இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறோம். அதில் குறிப்பாக ரூ.500 கோடி தமிழ்நாடு செமிகண்டக்டர் மிஷன், சூலூர் மற்றும் பல்லடத்தில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்திப் பூங்கா, சென்னைக்கு அருகில் உலகளாவிய நகரம் என்று பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறோம்.
பசுமை இயக்கத்திற்கு முன்னோடியாக தமிழ்நாடு செயல்படுகிறது.
நம்முடைய மின்வாகனக் கொள்கை மாநிலத்தை இவி உற்பத்தியின் மையமாக மாற்றி இருக்கிறது. ஓலா, வின்பாஸ்ட், டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள், தங்களின் திட்டங்களை நம்முடைய மாநிலத்தில் நிறுவியிருக்கிறார். மேலும், பசுமை ஹைட்ரஜன் திட்டங்களிலும் முக்கிய முதலீடுகள் செய்யப்பட்டிருக்கிறது. நகர்ப்புற நிலைத்தன்மைக்கு நீர் பாதுகாப்பும் கழிவு மேலாண்மையும் மிகவும் முக்கியம். இதைக் கருத்தில் கொண்டுதான், தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திடக்கழிவு மேலாண்மை மற்றும் சர்க்குலர் எக்கானமி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கி, சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாக்க மறுசுழற்சி மற்றும் கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டங்கள் ஊக்குவிக்கப்படுகிறது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மூலமாக, நிலைத்தன்மை கொண்ட வாழ்விடங்களை ஊக்குவித்து, கார்பன் பயன்பாட்டை குறைத்து, காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள நினைக்கிறோம்.
எனவே, மின்சார போக்குவரத்து, நிலையான கட்டுமானம் மற்றும் தூய்மையான தொழில்நுட்பம் போன்ற பசுமை பொருளாதாரத் துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு உங்களை இந்தத் தருணத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன். புத்தாக்கமான ஸ்மார்ட் நகர தீர்வுகள், ஆற்றல் செயல்திறன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற திட்டங்களில் எங்களுடன் இணைந்து செயல்படுங்கள் என்று உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.
வாழ்வதற்கேற்ற, நிலைத்தன்மை கொண்ட மற்றும் செழிப்பு நிறைந்த நகரங்களை உருவாக்குவதுதான், நம் எல்லோருடைய இலக்கு. வளர்ச்சியும் நிலைத்தன்மையும் ஒன்றிணையும் இந்த மாற்றம் நிறைந்த பயணத்தில், தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடக் கூடாது. மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டு இருக்கும் நம்முடைய தமிழ்நாட்டுக்கு உங்களோடு தொடர்பில் இருக்கும் முதலீட்டாளர்களை நீங்கள் அழைத்துக் கொண்டு வர வேண்டும். நம் நகரங்கள் உலகளவில் போட்டி போடக் கூடியவைகளாக மட்டுமல்லாமல், இன்றைக்கு வாழ்வதற்கேற்ற, நிலையான மற்றும் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய உயரிய நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
* சென்னையை உலகத் தரத்திலான நகரமாக்க திட்டம்….
பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களுக்கு இந்த வளர்ச்சியோடு மக்கள் வாழ எல்லா வகையிலும் ஏற்றதாக இருக்க வேண்டும். மக்களின் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்தும் வகையில் நகரங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட வேண்டும்.
சென்னையை ஒரு உலக தரத்திலான நகரமாக உருவாக்க, மூன்றாவது முழுமைத் திட்டத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. மாநில அரசு சார்பாக கோயம்புத்தூர், மதுரை, ஓசூர், சேலம், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 136 நகரங்களுக்கு முழுமைத் திட்டங்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. இதன் மூலம் நகர விரிவாக்கங்கள் நடைபெறும்போது மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் மேம்படும்.
* பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்…
டாக்டர் நந்தினி ரங்கசாமி இந்திய தொழில் கூட்மைப்பின் தென்னிந்திய தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை நேர்மையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் தலைவராக இருக்கக்கூடிய ஜி.ஆர்.ஜி. கல்விக் குழுமத்தைச் சேர்ந்த பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிதான் தமிழ்நாட்டிலேயே சிறந்த கல்லூரியாக கடந்த ஆண்டு என்ஐஆர்எப் தரவரிசையில் இடம்பெற்றிருக்கிறது என்பதே அவரின் தலைமைப் பண்பை எடுத்துக்காட்டுகிறது.தமிழ்நாட்டில் இருக்கும் பெண்களுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார் நந்தினி ரங்கசாமி. அவருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
The post கடந்த 11 மாதங்களில் 12.6 பில்லியன் டாலர் ஏற்றுமதி இந்தியாவில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.