புதுடெல்லி: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை ஜவுளித் திறன் பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் எம்.பி எழுப்பிய கேள்விகள் வருமாறு: தமிழ்நாடு ஒரு முக்கிய ஜவுளி மையமாக இருப்பதால், இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதிக்கு கணிசமாகப் பங்களிக்கிறது, மேலும் ஜவுளி 2030 என்ற தொலைநோக்குப் பார்வையில் தமிழ்நாட்டிற்கான பங்கு என்ன?
ஒன்றிய அரசின் 350 பில்லியன் டாலர் ஜவுளித் தொழில் இலக்கு மற்றும் 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கில் தமிழ்நாட்டின் ஜவுளித்துறை எந்த அளவுக்கு பங்களிக்கும்? கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஜவுளி உள்கட்டமைப்பிற்காக செய்யப்பட்ட முதலீடுகளின் விவரங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஜவுளிப் பூங்காக்களை மேம்படுத்தி உலகளவில் போட்டியிடுவதற்கு ஒன்றிய அரசால் வழங்கப்படும் ஆதரவு என்ன? கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எத்தனை ஜவுளித் திறன் பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன?
தமிழ்நாட்டைச் சார்ந்த ஜவுளித் தொழில்கள் நிலையான சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கும், ஜவுளிகள் மறுசுழற்சி முறைக்கு மாறுவதற்கும் வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் என்ன? தமிழ்நாட்டின் ஆட்டோமோட்டிவ் மற்றும் மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் போன்ற தொழில்நுட்ப ஜவுளித்துறையில் அதன் பங்கை அதிகரிக்க, தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி எவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்.
The post கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எத்தனை ஜவுளித் திறன் பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி.கேள்வி appeared first on Dinakaran.