கச்சத்தீவை திரும்ப மீட்க வேண்டும் என தீர்மானம்; பேரவையில் அதிமுக-திமுக இடையில் காரசார விவாதம்: ஆதரவு தெரிவித்த எடப்பாடிக்கு முதல்வர் நன்றி

4 days ago 4

சட்டப்பேரவையில் கச்சத்தீவை திரும்ப மீட்க வேண்டும் என தீர்மானத்தின்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் – திமுக அமைச்சர்களுக்கும் இடையில் காரசார விவாதம் நடந்தது. இறுதியில் ஆதரவு தெரிவித்த எடப்பாடிக்கு முதல்வர் நன்றி கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த கச்சத்தீவு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் திமுக இருந்தது. அப்பொழுது எல்லாம் ஏன் இந்த கச்சத்தீவை பெறுவதற்கு முயற்சி எடுக்கவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நீங்களும் ஆட்சி பொறுப்பில் இருந்திருக்கிறீர்கள், 10 வருடம் நீங்களும் இருந்திருக்கிறீர்கள். அப்போது என்ன செய்தீர்கள். கிட்டத்தட்ட 54 கடிதங்களை நாங்கள் இதுவரையில் அனுப்பி வைத்திருக்கிறோம். பிரதமரை நேரடியாக சந்திக்கும் போதெல்லாம் இதுகுறித்து பேசியிருக்கிறோம். சமீபத்தில் நீங்கள் டெல்லிக்கு சென்று வந்தீர்களே, அப்போது இதைப்பற்றி பேசிவிட்டு வந்தீர்களா, சொல்லியிருக்கிறீர்களா, சொல்லுங்கள்.

எடப்பாடி பழனிசாமி: நீங்கள் வாஜ்பாய் அரசில் இருந்தீர்கள், ஏன் கேட்கவில்லை என்று நான் கேட்கிறேன்.
துரைமுருகன்: வேறுபாடுகளை பேசினால் இந்த பிரச்னைக்கு தீர்வு வராது. அதைத்தான் முதல்வர் சொன்னார், இதை எல்லோரும் பெருந்தன்மையாக ஆதரித்துக் கொடுங்கள் என்று சொன்னார். இதில் பாஜ உறுப்பினர் வானதி சீனிவாசன்கூட, ஆதரித்திருக்கிறார், அவருக்கு நன்றி. எனவே, பழையதை எடுத்து பேசினால் இரு பக்கமும் சரியாக இருக்காது.

எடப்பாடி: முதல்வர், நீங்கள் போய் பேசுங்கள் என்று சொன்னார். நான், ஏற்கனவே பேசினேன், அவர் கவனிக்கவில்லை என்று செல்கிறேன். நான் ஏற்கனவே முதலமைச்சராக இருந்தபொழுது மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரை அழைத்துச் சென்று, இதுகுறித்து விளக்கமாக பிரதமரிடத்தில் தெரிவித்தேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நீங்கள் ஆட்சியில் இருந்தபோது ஒன்றிய அரசுடன் பேசவில்லையென்று யாரும் சொல்லவில்லை. நானும் பலமுறை டெல்லிக்கு சென்றபோது, பிரதமரிடத்தில் இதுகுறித்து வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறேன்; மனுவாகவும் கொடுத்து இருக்கிறேன். இதைவிட வேறு என்ன செய்யமுடியும்? 54 கடிதங்களை அனுப்பியிருக்கிறேன். அந்த முயற்சியில் நீங்கள் ஈடுபடவில்லையென்று சொல்லவில்லை. இந்த பிரச்னையில் ஜெயலலிதா நீதிமன்றத்திற்கு சென்றது குறித்து நானே பேசினேன். நான் பேசும்போதும் அதுகுறித்து சொன்னேன். அதில் என்ன தவறு இருக்கிறது?

எடப்பாடி: நாங்கள் கேட்பது 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி…
துரைமுருகன்: நீங்கள் ஏன் வாஜ்பாய் அரசை கவிழ்த்தீர்கள்? நாங்கள் உங்களை கேட்கிறோம். இந்தி படிக்கச் சொன்னார்கள் என்பதற்காகவா கவிழ்த்தீர்கள்? அதற்காகவா கவிழ்த்தீர்கள்? தீர்மானத்திற்காக, பேசாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்.

சபாநாயகர் அப்பாவு: தீர்மானத்தின் மீது பேசுங்கள். நடந்து முடிந்தது இல்லாமல் நடப்பதற்குண்டான வழியைச் சொல்லுங்கள்.
எடப்பாடி: எங்களுடைய கோரிக்கையை ஏற்காத காரணத்தால் நாங்கள் வெளியில் வந்தோம். உங்களால் வர முடிந்ததா?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்த தீர்மானத்தை ஒட்டித்தான் பேச வேண்டும். நான் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தின் அடிப்படையில்தான் நீங்கள் பேச அனுமதித்திருக்கிறீர்கள். அதை ஒட்டித்தான் பேச வேண்டும். இதில் இருக்கும் அரசியல் விவரங்களையெல்லாம் பேசி, இதை அரசியலாக்கி, பிரச்னையாக்க வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் அனுமதிக்கிறீர்களா என்பதுதான் என்னுடைய கேள்வி?
சபாநாயகர்: முதலமைச்சர் ஒரு தீர்மானம் கொண்டு வந்தால், அந்த தீர்மானத்தின் மீதுதான் அனைவரும் பேச வேண்டும். கொஞ்சம், கொஞ்சம் வழி தவறி பேசுவதையும் நீக்கிவிடுகிறோம். அவர் பேசியதை நீக்கியாகிவிட்டது. மீண்டும் 16 வருடங்களுக்குப் பின்னால் சென்றால் எவ்வாறு தீர்வு காண முடியும். இதுகுறித்து மட்டும் பேசுங்கள்.

அமைச்சர் எ.வ.வேலு: இந்த தீர்மானம் ஒட்டுமொத்தமாக தமிழர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில்தான், முதல்வர் இதில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் ஒருசேர இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். பதினாறு ஆண்டு காலம் நீங்கள் அமைச்சரவையில் இருந்து என்ன செய்தீர்கள் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறார். தம்பிதுரை ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றுகின்ற இடத்தில், துணை சபாநாயகராக இருந்திருக்கிறார். ஏற்கனவே அவர் ஒன்றிய அரசில் அமைச்சராக இருந்திருக்கிறார். கடம்பூர் ஜனார்த்தனன் அமைச்சராக இருந்திருக்கிறார். இவ்வாறு அதிமுக சார்ந்தவர்கள் பலர் அமைச்சராக இருந்திருக்கிறார்கள். அவர்கள் மட்டும் உடனடியாக சட்டத்தை நிறைவேற்றி நம்மிடத்தில் ஒப்படைத்துவிட்டார்களா? இதைப்பற்றி ஒருவருக்கொருவர் லாலி பாட வேண்டாம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: மீண்டும், மீண்டும் தவறான தகவலை அவர் பதிவு செய்கிறார். அதனால், தீர்மானத்தை நிறைவேற்றித் தருவதற்கான வழிவகையை நீங்கள் காண வேண்டும். இல்லையென்றால் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு போகட்டும்; வேண்டாம் என்று சொல்லவில்லை. அது அவர்களுடைய உரிமை.
எடப்பாடி: இது உணர்வுப்பூர்வமான பிரச்னை. இது மீனவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை. நம்முடைய உரிமையை மீட்டெடுப்பதற்காக கொண்டு வந்த தீர்மானம். ஆகவே, இந்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது. இவ்வாறு விவாதம் நடந்தது. பின்னர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

The post கச்சத்தீவை திரும்ப மீட்க வேண்டும் என தீர்மானம்; பேரவையில் அதிமுக-திமுக இடையில் காரசார விவாதம்: ஆதரவு தெரிவித்த எடப்பாடிக்கு முதல்வர் நன்றி appeared first on Dinakaran.

Read Entire Article