கங்கைகொண்டான் ஊராட்சியை தரம் உயர்த்த எதிர்ப்பு: 5 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்

2 months ago 8

நெல்லை, டிச.3: கங்கைகொண்டான் ஊராட்சியை சங்கர்நகர், நாராணம்மாள்புரம் பேரூராட்சியுடன் இணைந்து புதிதாக நகராட்சி உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கங்கைகொண்டான் சுற்றுவட்டார 5 கிராம மக்கள், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் கங்கைகொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட வடகரை, ராஜபதி, அணைத்தலையூர், புங்கனூர், துறையூர் ஆகிய 5 கிராமங்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கங்கைகொண்டான் ஊராட்சியை சங்கர்நகர், நாராணம்மாள்புரம் பேரூராட்சியுடன் இணைந்து புதிதாக நகராட்சி உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கங்கைகொண்டான் அருகேயுள்ள வடகரை ஊர் தலைவர்கள் மந்திரம், முருகேசன், ராஜபதி ஊர் தலைவர்கள் சுப்பிரமணியன், பரமசிவம் மற்றும் அணைத்தலையூர், புங்கனூர் மற்றும் துறையூர் உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த சுமார் 100 பேர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், தங்கள் கிராமங்கள் கங்கைகொண்டான் ஊராட்சியுடன் நீடிக்க வேண்டும். கங்கைகொண்டான் ஊராட்சியை சங்கர்நகர், நாராணம்மாள்புரம் பேரூராட்சியுடன் இணைந்து புதிதாக நகராட்சி உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷமிட்டனர். இதனையடுத்து கோரிக்கையை வலியுறுத்தி இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனுக்களில் கூறியிருப்பதாவது: வடகரை, ராஜபதி, அணைத்தலையூர், புங்கனூர், துறையூர் கிராம மக்கள் கால்நடை மேய்ச்சல் தொழிலை நம்பி உள்ளோம். மேலும் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகிறோம். பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் எங்கள் பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் வறுமை கோட்டில் பின்தங்கி உள்ளோம். எங்கள் பகுதிகள் புதிதாக உருவாகவுள்ள நகராட்சியுடன் இணைத்தால் கட்டிட வரி, தண்ணீர் வரி, கட்டிட அனுமதி கட்டணம், தொழில் வரி உட்பட பல்வேறு வரி விதிப்புகளால் எங்களது பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட கூடும். வேலைவாய்ப்பு மற்றும் அரசின் சலுகைகள் பறிபோகும். எனவே கங்கைகொண்டான் கிராம ஊராட்சியை பேரூராட்சியாகவும் மற்றும் நகராட்சியாகவும் மாற்றம் செய்யாமல் கிராம ஊராட்சியில் தொடர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post கங்கைகொண்டான் ஊராட்சியை தரம் உயர்த்த எதிர்ப்பு: 5 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article