நன்றி குங்குமம் தோழி
‘‘சமீபத்தில் அழகர்கோவிலில் நடந்த ஷூட்டிங் ஒன்றில் இருந்த நடிகர் விஜய்சேதுபதி, எங்கள் காணொளி பார்த்ததும், எங்களை கைபேசியில் அழைத்து, உப்புக்கண்டம் வேண்டுமென ஆர்டர் செய்தார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே நேரில் சென்று, நேரில் பார்த்து கொடுத்துவிட்டு வந்தோம். முதலில் ஒரு கிலோ ஆர்டர் செய்தவர், உப்புக்கண்டத்தை சுவைத்த பிறகு, மீண்டும் கைபேசியில் அழைத்து, ‘சுவை சூப்பராக இருக்கிறது’ என நெகிழ்ச்சியாகப் பேசி ஃபீட்பேக் கொடுத்து, மீண்டும் 3 கிலோ உப்புக்கண்டம் வேண்டுமென ஆர்டரும் கொடுத்தார், எங்களின் உப்புக்கண்டம் தயாரிப்புக்கு இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் கார்த்தி போன்ற விஐபி கஸ்டமர்கள் இருக்கிறார்கள்’’ என பேச ஆரம்பித்தார்கள், மதுரையில் உப்புக்கண்டம் தயாரிப்புத் தொழிலில் தனி முத்திரை பதித்துவரும் சர்மிளா பானு-புஹாரி ராஜா தம்பதியர்.
‘‘எனக்கு ஒரு கனவிருந்தது. அது ஃபேஷன் டெக்னாலஜி. அவருக்கும் ஒரு கனவிருந்தது. அது மீடியா. ஆனால் எங்கள் இருவரையும் இணைத்த திருமண வாழ்க்கை கொடுத்த சில நிர்பந்தங்களால், இந்தத் தொழிலுக்குள் ஐக்கியமானோம்’’ என பேச ஆரம்பித்தார் சர்மிளா பானு. ‘‘எங்கள் திருமணம் நடந்தபோது நான் கோவையில் ஃபேஷன் டெக்னாலஜி முடித்து அது தொடர்பான வேலையில் இருந்தேன். அவர் இஞ்சினியரிங் முடித்து அபுதாபியில் பணியாற்றினார்.
இந்த நிலையில்தான் எங்கள் திருமணம் முடிவானது. திருமணம் முடிந்த சில மாதங்களில் நானும் அபுதாபி செல்ல, மகன் ஆதிஷ் பிறந்தான். குடும்பமாக நாங்கள் அபுதாபியில் வசித்தாலும் அவரின் மீடியா கனவு அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டே இருந்தது. பல்வேறு ஊடகங்களுக்கும் ஃப்ரீலான்சராக எழுதுவது, திரைத்துறை சார்ந்து பயணிப்பது என செயல்பட்டு வந்த நிலையில், ‘கண்ணே கலைமானே’ படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இந்த நிலையில் கொரோனா தொற்று தந்த நெருக்கடியில் நாங்கள் இந்தியா திரும்பும் சூழல்.
எனது மாமனாருக்கு தொழில் கறிகடைதான். எனது கணவருக்கும் கறிகடை தொழிலில் ஏ டூ இசட் அத்துபடி என்பதால், இந்தியா திரும்பியதுமே தொழிலையே கவனிக்க ஆரம்பித்தார். கூடவே மீடியா கனவும் துரத்த, ‘புகாரி ஜங்ஷன்’ என்கிற பெயரில் ‘யு டியூப்’ சேனல் தொடங்கி, அவர் விருப்பம் போல் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலை பதிவு செய்ய ஆரம்பித்தார்.
கூடவே, ஆட்டுக்கறியினை கடைகளில் எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்?
எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? ஆட்டின் குடலை எப்படி சுத்தம் செய்வது? ஆட்டின் மூளை, ஈரல், எலும்பு, மண்ணீரல், சுவரொட்டி போன்றவற்றை எப்படி சுத்தம் செய்வது போன்றவற்றையும் காணொளியாக்கி பதிவேற்றினார். விளிம்பு நிலை மனிதர்களின் காணொளிகளைவிட, ஆட்டுக்கறி தொடர்பான காணொளிக்கு பார்வையாளர்கள் அதிகரித்தனர். கமென்ட் பகுதியில் கறி வாங்குவது, சுத்தம் செய்வது குறித்த சந்தேகங்களை பலரும் கேட்டனர். இப்படித்தான் ஒருநாள் உப்புக்கண்டம் தயாரிப்பை காணொளியாக்கினோம். இதற்கு பார்வையாளர்களின் ரீச் கூடுதலாக இருந்தது. பலரும் கமென்ட் பகுதிக்குள் வந்து எங்களுக்கும் உப்புக்கண்டம் தயாரித்து தாருங்கள் எனக் கேட்கத் தொடங்கினர். உப்புக்கண்டம் தயாரிப்பு தொழிலுக்கு ஸ்பார்க் கிடைத்த இடம் இதுதான்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.
‘‘ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தயாரித்துக் கொடுத்தோம். அப்போது கூட இதை தொழிலாய் மாற்றும் எண்ணம் இல்லை. ஆனால் எங்கள் உப்புக்கண்டத்தை ருசித்தவர்கள், ‘நன்றாக இருக்கின்றது. இன்னும் கூடுதலாய் தயாரித்து கொடுங்கள்’ என மீண்டும் மீண்டும் கேட்க, தொழிலாய் மாற ஆரம்பித்தது. இதற்கு கறியின் குவாலிட்டிதான் முக்கியமே. குட்டியான இளம் ஆடுகளை மட்டுமே இதற்கு பயன்படுத்துகிறோம். சொந்தமாக கறிக்கடையும் வைத்திருப்பதால், தொழிலுக்கு இது கூடுதலாய் கை கொடுக்கிறது. என் மாமனார் கொங்குநாட்டுப் பகுதிகள் மற்றும் கர்நாடகா மாநிலம் என பயணித்து, ஆட்டுச் சந்தைகளுக்கு சென்று, தரம் பார்த்து, கறிக்கான ஆடுகளை வாங்கி வண்டிகளில் ஏற்றிக் கொண்டுவருவார்.
அதிகமாக உழைப்பை சுரண்டுகிற தொழில்தான் என்றாலும், முதல்நாள் அதிகமான வேலைகள் இருக்கும். ஆட்டை உரித்து, கறிகளை நறுக்கி எடுக்கும்போதே கொழுப்பு இல்லாத, எலும்பு இல்லாத கறிகளாகப் பார்த்து தனியாக ஒதுக்கிவிடுவோம். கறித் துண்டங்களை தண்ணீர்விட்டு நன்றாக அலசி சுத்தம் செய்து, முழுமையாக தண்ணீரை வடித்து, உப்பு, மஞ்சள்தூள் இணைத்து பதப்படுத்துகிற வேலையினைத் தொடங்குவோம்.தண்ணீர் இருந்தால் மசாலா கறியில் ஒட்டாது என்பதால் தண்ணீர் முழுமையாக வடிந்த பிறகே மசாலாவை இணைக்க முடியும்.
இதில் எவ்வளவு கறிக்கு எவ்வளவு உப்பு, எவ்வளவு மஞ்சள் தூள் சேர்க்கிறோம் என்கிற கணக்கு முக்கியம். உப்புக்கண்டத்தை காய வைப்பதிலும் பக்குவம் இருக்கிறது. கறியில் உள்ள ஈரச் சத்து முழுமையாக நீங்கும் வரையிலும், குறைந்தது நான்கு ஐந்து நாட்கள் வெயிலில் காயவைக்க வேண்டும்.உப்புக் கண்டத்திற்கு நாம் செய்யும் முதலீட்டுத் தொகை அதிகம் என்பதால், தண்ணீர் படாமல்… மழையில் நனைந்து விடாமல் பக்குவமாக, அதேநேரம் கவனமாக காயவைக்க வேண்டும்.
லேசான தூறல் விழுந்தாலும் முழுமையாக வீணாகிவிடும். தேவைக்கு அதிகமாக காயவைத்து விட்டாலும் சுவை மாறும். பக்குவமாய் தயாரான உப்புக்கண்டத்தை தண்ணீர் படாமல் பாதுகாப்பாய் வைத்தால் ஒரு வருடத்திற்கு மேல் கெடாமல் அப்படியே இருக்கும்’’ என்றவர், ‘‘சரியான பக்குவத்தில் நாங்கள் தயாரிப்பதால்தான் எங்களைத் தேடி வாடிக்கையாளர்கள் அதிகம் வருகிறார்கள்’’ என்கிறார் நம்பிக்கையோடு.
‘‘உப்பு, மஞ்சள் மட்டும் இணைத்து தயாரான உப்புக்கண்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றி, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மட்டன் மசாலா எனக் கூடுதலாக ஒரு சில ஃபிளேவர்ஸ் இணைத்து தயாரித்ததில், ஃபிளேவர்ஸ் உப்புக்கண்டத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிகமாகினர். 4 கிலோ கறி இருந்தால்தான், அதில் இருக்கும் தண்ணீர் சத்து முழுமையாக நீங்கி, சுருங்கி 1 கிலோ உப்புக்கண்டமாகக் கிடைக்கும். இதில் ஒரு மாதத்திற்கு 400 முதல் 500 கிலோ மட்டனை நாங்கள் உப்புக்கண்டமாக மாற்றுகிறோம். இது 100 கிலோவாக எடை குறையும். இதில் வாடிக்கையாளரின் தேவைகள் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சிலர் துண்டம் பெரிதாக வேண்டும் என்பார்கள்.
சிலர் சின்னச் சின்னத் துண்டங்களாக கேட்பார்கள். சிலர் மசாலா தூக்கலாக கேட்பார்கள். சிலர் மஞ்சள், உப்பு மட்டும் போதும் என்பார்கள். வாடிக்கையாளரின் விருப்பத்திற்கும் தயாரித்து தருகிறோம். ஆட்டுக்குடலிலும் சிலர் உப்புக்கண்டம் கேட்கிறார்கள். குடலை சுத்தம் செய்வது கடினம் என்பதால், இதுமட்டும் பரிசீலனையில் இருக்கிறது. தென் மாவட்டங்களில் உப்புக்கண்டத்தை வடகமாக வறுத்து மட்டுமே சாப்பிடுவார்கள். இன்று ஃபுட் விலாக்கர்ஸ் அதிகம் வருவதால், உப்புக்கண்டத்தில் விதவிதமான ரெசிபி, கிரேவி செய்வது, பிரியாணி செய்வதென முயற்சிக்கின்றனர். சிலர் ஃபுட் பெஸ்டிவலில் உப்புக்கண்டத்தை பிரியாணி செய்தும் கலக்குகின்றனர். கூடுதலாக பல்வேறு ரெசிபிகளையும் தயாரிக்க முயற்சிக்கின்றனர்.
இந்தத் தொழிலுக்குள் நுழைவதற்கு முன்பு, என்னால் இது முடியுமா? நான் இதை செஞ்சுறுவேனா என்கிற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் இறங்கி நீச்சல் அடிக்கத் தொடங்கிய பிறகே, அதற்கான ஃப்ளோ இயல்பாக அதன் போக்கில் கிடைத்தது. தொழில் செய்யணும் என முடிவு செய்துவிட்டால் யோசிக்காமல் பெண்கள் இறங்கிடணும்’’ என்றவரைத் தொடர்ந்தவர் அவரின் கணவரும், புகாரி ஜங்ஷன் யு டியூப் சேனலின் இயக்குநருமான புஹாரி ராஜா.‘‘தொழிலில் எங்கள் இருவருக்குமே ஈக்குவலான பொறுப்பு இருக்கிறது.
எங்கள் தயாரிப்பை மார்க்கெட்டிங் செய்வது, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது, ஆன்லைன் ஆர்டர்களை, பார்சல் செய்கிற வேலைகளை நான் பொறுப்பெடுத்து முழுமையாக
கவனிக்கின்றேன். நமது நாட்டின் ஆட்டுக்கறி வெளிநாடுகளில் கிடைக்காது என்பதால், வெளிநாடு வாழ் இந்தியர்கள், உணவகம் நடத்துபவர்கள், வீட்டு பயன்பாட்டுக்கு எனவும் சிலர் மொத்த மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். வெளிநாடுகளை நோக்கி எங்களின் உப்புக்கண்டம் பயணிப்பதால், ஹலால் சான்றிதழ், உணவு தரத்திற்கான எஃப்.எஸ்.எஸ்.ஐ சான்றிதழ் போன்றவற்றையும் வாங்கியுள்ளோம். மழை காலங்களில் உப்புக்கண்டத்தை காயவைக்க வெதர் மட்டுமே பிரச்னை என்பதால் சோலார் போடுகிற திட்டமும் இருக்கிறது’’ என்றவாறு விடைபெற்றனர்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
The post எங்க உப்புக்கண்டத்திற்கு நடிகர் விஜய்சேதுபதி மிகப்பெரிய ஃபேன் appeared first on Dinakaran.