
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஓரிச்சேரி காட்டூரில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றம் மற்றும் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் இரவு அம்மன் திருவீதி உலா மற்றும் படி விளையாடுதல் நிகழ்ச்சி நடந்தது. 24-ந் தேதி பச்சை பூஜை, பிரம்பு பூஜை நடந்தது.
25-ம் தேதி (நேற்று) காலை தீர்த்தம் எடுத்து வருதல், வாண வேடிக்கை, அரண்மனை பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, இரவு அக்னி குண்டம் துவங்கப்பட்டது.
இன்று காலை அம்மன் திருக்கல்யாணம், அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் வந்து, கையில் பூ சுற்றிய பிரம்பு ஏந்தி அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். இதையடுத்து, காலை 11 மணிக்கு பொங்கல் வைத்தல், மாலை 3 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அக்னி அபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவில், ஓரிச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திரௌபதி அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இதையொட்டி, ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை (வியாழக்கிழமை) காலை நடக்கும் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.