
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்தார். அவர் நாக்பூா் ரேஷ்மிபாக்கில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு சென்றார். பிரதமர் ஆன பிறகு அவர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் வருவது இதுவே முதல் முறையாகும். அவர் அங்குள்ள ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேசவ் பாலிராம் ஹெட்கேவர் மற்றும் 2-வது தலைவர் எம்.எஸ்.கோல்வால்கரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்தநிலையில், பாஜகவில் 75 வயது நிறைவடைந்துவிட்டால் எந்த ஒரு பதவியிலும் நீடிக்க முடியாது என்பது நடைமுறை. பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அத்வானி தொடங்கி எடியூரப்பா வரைக்கும் இதனைத்தான் பாஜக தற்போது வரை கடைபிடித்து வருகிறது. அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டு 75 வயது நிறைவடைகிறது. இதனால் பிரதமர் பதவியில் மோடி தொடர்ந்து நீடிப்பாரா? என்கிற விவாதம் அவ்வப்போது எழுகிறது. மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தை சுட்டி காட்டி எழுப்பினார். இதனால் அதிர்ந்து போன பாஜக, பிரதமர் மோடிதான் 5 ஆண்டுகாலத்துக்குப் பிரதமர் என அறிவித்தது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் எம்பி மும்பையில் செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு சென்றார். பிரதமர் மோடி, தாம் பதவியில் இருந்து விலகும் ஓய்வு முடிவை ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்களிடம் தெரிவிக்கவே அவர் அங்கு சென்றாரா? இதனைத் தொடர்ந்து பிரதமராக உள்ள நரேந்திர மோடியின் ஓய்வுக்குப் பின்னர் புதிய பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ரகசிய ஆலோசனை நடத்தினர். பிரதமராக உள்ள மோடிக்குப் பின்னர் நாட்டின் புதிய பிரதமராக மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரே தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார்.
அவரது இந்த பேட்டி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் சஞ்சய் ராவத்தின் இந்த கருத்தை மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியே 2029-ம் ஆண்டுவரை அப்பதவியில் நீடிப்பார். பிரதமர் மோடியை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹுசைன் தல்வாய் கூறுகையில், சஞ்சய் ராவத்தின் கருத்து சரியானது என்று கூறியுள்ளார். '75 வயதைக் கடந்தவர்களுக்கு ஆர்எஸ்எஸ் ஓய்வினை அறிவித்துவிடுவார்கள். பிரதமர் மோடிக்கு வயதாகிறது. அதனால் ஆர்எஸ்எஸ் அவருடைய ஓய்வு குறித்து ஆலோசிக்கலாம் என்று கூறினார்.