ஓமலூர் முதல் தர்மபுரி வழியாக ஓசூர் வரை ரூ.100 கோடியில் இருவழி ரயில் பாதை திட்டம் நிறைவேறுவது எப்போது? அறிவிப்போடு நிற்பதால் பயணிகள் ஏமாற்றம்

3 months ago 13

தர்மபுரி: தர்மபுரி நகரின் அருகே தர்மபுரி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் 1906ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. மீட்டர் கேஜில் ஒருவழிப்பாதையாக ரயில்பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில்நிலையம் வழியாக சேலம் -பெங்களூரு, பெங்களூரு – சேலம் மார்க்கமாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி பயணிகள் மற்றும் சரக்கு ரயில் 25க்கும் மேற்பட்டவை இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி 2 ஆயிரம் பயணிகள் ஏறி, இறங்குகின்றனர். ஒருவழி ரயில்பாதை என்பதால், அதிக ரயில்களை இயக்க முடியாத நிலை உள்ளது. மேலும், தர்மபுரியில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் சேவை வசதி இல்லை. இதனால் தர்மபுரியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரியில் ஒருவழிப்பாதை மட்டுமே உள்ளதால், விரைவு ரயில்கள் செல்லும் போது, மறு மார்க்கத்தில் வரும் ரயில்கள் இணைப்பு பாதையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் காலதாமதத்தால், பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு, குறித்த நேரத்தில் சென்று சேர முடியாமல் சிரமத்திற்கு ஆளாவது தொடர்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சேலம் மாவட்டம் ஓமலூர் முதல் தர்மபுரி மற்றும் தர்மபுரி முதல் ஓசூர் இடையே உள்ள ரயில் பாதையை இருவழி ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ரூ.100 கோடியில் ஓமலூர் முதல் ஓசூர் இடையேயான ரயில் பாதையை இருவழி ரயில் பாதையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை நடக்கவில்லை.சர்வே செய்து நிலம் எடுத்தல், மண் பரிசோதனை செய்தல், சிறுபாலங்கள் அமைக்க இடங்கள் தேர்வு பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் அவ்வவ்போது, தனி ரயில்களில் வந்து அதிகாரிகள் இருவழி ரயில்பாதை அமைக்க சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ‘தர்மபுரிக்கு இருவழி ரயில் பாதை மிகவும் அவசியமானது. தர்மபுரி சிப்காட் தொழில்பூங்கா இயங்கும் போது, இந்த இருவழி ரயில்பாதை மிகவும் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். ஆனால் அறிவிப்போடு நிற்கிறது. எனவே, ரயில்வே துறை தர்மபுரி வழியாக இருவழி ரயில்பாதை அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கனவே உள்ள ரயில் பாதை அருகில் மற்றொரு ரயில் பாதை அமைப்பதற்கு இடம் வரையறை செய்யப்படும். பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்ட பின்பு, எங்கெங்கு மேம்பாலங்கள் வேண்டும் என முடிவு செய்வதற்கு ஆய்வுப்பணிகள் செய்யப்படும். அதன்பின் 2வது ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஓமலூர் முதல் தர்மபுரி வழியாக ஓசூர் வரை ரூ.100 கோடியில் இருவழி ரயில் பாதை திட்டம் நிறைவேறுவது எப்போது? அறிவிப்போடு நிற்பதால் பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article