நவகிரகங்களில், தன்னிகரற்ற தெய்வீக சக்தியும், பெருமையும், புகழும் கொண்டு திகழ்பவர், குரு பகவான்!
குருவிற்கு, தேவ குரு, ஆசாரியன், பொன்னன், பிரகஸ்பதி என்ற பல பெயர்களும், பெருமைகளும், புகழும் உண்டு!!
நவகிரகங்களில், அதிச்சாரம், வக்கிரம் ஆகிய கதி பேதங்களினால், எவ்விதப் பாதிப்பும் இல்லாத தனிப் பெருமையுடன் திகழும் குரு, முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும், தேவர்களின் அதிபதியான தேவேந்திரனுக்கும் ஆசாரியன் ஆவார்.
வேதங்களினால் பெருமை பெற்ற அந்தணர்களுக்கும், பசுக்களுக்கும், ஆன்மிக சக்திக்கும் நாயகன் குரு!
வியாழன் என்ற பெயரும், இவருக்கு உள்ளது. ஜனன கால ஜாதகத்தில், குரு பகவான் சுப பலம் பெற்றுள்ளவர்கள், வாழ்க்கையில் நல்ல கல்வி, குடும்ப வாழ்க்கை, ஒழுக்கம், நேர்மை, தெய்வ பக்தி, உத்தியோகம், வியாபாரம் ஆகிய யோகங்களைப் பெற்றுத் திகழ்வார்கள். உலகப் புகழ் பெற்ற மேதைகள், பிரம்மத்தை அறிந்த ஞானிகள், இறைவன் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட மகான்கள் ஆகியோர்களின் ஜனன கால ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தால், அவற்றில் குரு பகவான் சுப பலம் பெற்றிருப்பதைக் காணலாம். வேதம் அறிந்த பிராமணர்களுக்கும், பசுக்களுக்கும் அதிபதி கிரகம் இவரே!
ஜாதகத்தில் மற்ற கிரகங்களினால் ஏற்படும் மிகக் கடுமையான தோஷங்களைக் கூட, தனது சுபப் பார்வையினால் போக்கிவிடும் சக்தி கொண்டவர், குரு!
தாய் நாட்டின் நலனுக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்த உத்தமர்கள், வீரர்கள் மற்றும் புகழ்பெற்ற அவதாரப் புருஷர்கள் ஆகியோரின் ஜாதகங்களை ஆராய்ந்தால், அவற்றில் குரு பகவான் சிறந்த சுப பலம் பெற்றிருப்பதைக் காண முடியும்!
ஜனன கால ஜாதகத்தில், குரு உச்ச பலம் பெற்றிருந்தால், அத்தகைய பாக்கியசாலிகள் ஒழுக்கம், விவேகம், வீரம், தன்னடக்கம், உத்தமமான மனைவி, நற்குணங்கள் அமைந்த குழந்தைகள், நியாயமாக நடத்தும் முதலாளிகள், பிரசித்திப் பெற்ற தீர்த்த – தல தரிசன பாக்கியம், ஆகியவற்றைப் பெற்று மகிழ்வர். களத்திர ஸ்தானத்திற்கு குரு பகவானின், சுபப் பார்வை இருப்பின், உத்தமமான மனைவியும், ஒழுக்கம் நிறைந்த குழந்தைகளும் பெற்றுப் பெறுமையடைவர்.
பணத்தாலும், பதவிகளினாலும், அதிகாரத்தினாலும், செல்வாக்கினாலும் அடைய முடியாத நிம்மதியையும், மன நிறைவையும் அளிக்கும் வாழ்க்கையை, குரு பகவானால் மட்டுமே கொடுக்க முடியும்!! ஜனன கால ஜாதகத்தில், தான் இருக்கும் ராசியிலிருந்து, ஐந்து, ஏழு, ஒன்பது ஆகிய இடங்களைத் தன் சுபப் பார்வையினால், தூய்மைப்படுத்துகிறார், குரு பகவான்.
சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூவரும் நட்புக் கிரகங்களாவர்! சுக்கிரனும், புதனும் பகைக் கிரகங்களாவர்!!
ஜாதகத்தில் தனுசு, மீனம் ஆகிய இரண்டு ராசிகளும் குரு பகவானுக்கு ஆட்சி வீடுகளாகும்!
கடக ராசி, உச்ச வீடு! மகர ராசி நீச்ச வீடு!!
ஒவ்வொரு ஜாதகத்தின் தரத்தையும், எடை போடுவதற்கு குரு பகவானின் நிலையையே பெரிதும் உதவுகிறது. ஓர் இளைஞனின் ஜாதகத்தில், களத்திர ஸ்தானத்தில், குரு அமர்ந்திருந்தாலும் அல்லது அந்த ராசி குருவினால் பார்க்கப்பட்டாலும், கற்பிற் சிறந்த கன்னிகை, மனைவியாக அமைவாள். அதே போன்று, கன்னிகையின் ஜாதகத்தில், களத்திர ஸ்தானத்திலோ அல்லது, மாங்கல்ய ஸ்தானத்திலோ குரு அமர்ந்திருப்பின், ஒழுக்கமும், நீண்ட ஆயுளும் கொண்ட கணவர் அமைவார் என “ஜோதிட ரத்னாகரம்” எனும் மிகப் புராதன ஜோதிடக் கிரந்தம் கூறுகிறது. இவற்றிலிருந்து, நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், குரு பகவான் எத்தகைய ஆதிபத்தியத்தைச் செலுத்துகிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
விசாகம், புனர் பூசம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் இவரே அதிபதி!
ஜனன கால ஜாதகத்தில், குரு பகவான் பலகீனமாக இருப்பின், பரிகாரமாக, தங்கத்தில் புஷ்பராகம் எனும் கல்லைப் பதித்து அணிந்து கொள்வது, வழக்கம்.
நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு, முகூர்த்த நேரம் நிர்ணயிக்கும்போது, குரு பகவானின், சஞ்சார நிலையையும் கணக்கில் எடுத்துக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது.
உலகப் புகழ்பெற்ற மேதைகள், மகான்கள், ஆசார்ய புருஷர்கள் ஆகியோரின் ஜாதகங்களை ஆராய்ந்தால், அவற்றில் குரு பகவான் பலம் பெற்றிருப்பதைக் காண முடியும்.
வியாழக்கிழமைதோறும் நெய் தீபம் ஏற்றி வைத்து, குரு பகவானைப் பூஜிப்பது அனைத்து கிரக தோஷங்களையும் போக்கும் சக்தி வாய்ந்தது.
குருவின் பிரத்யதி தேவதையான பிரம்ம தேவருக்கு ராஜஸ்தானிலுள்ள புஷ்கரம் ேக்ஷத்திரத்தில், பிரசித்திப் பெற்ற திருக்கோயில் உள்ளது.
மகான் முத்து ஸ்வாமி தீட்சிதர், குரு பகவான் மீது, “ப்ரஹஸ்பதே தாராபதே” எனும் தனது கீர்த்தனையில், குருபகவானின் தெய்வீகப் பெருமைகளைப் போற்றியுள்ளார்.
பிள்ளை அல்லது பெண்ணின் திருமணத்திற்கு முகூர்த்தம் நிர்ணயிக்கும்போது, குருவின் சஞ்சார நிலையும் முக்கியமாகக் கருத்தில் கொண்டே முகூர்த்த நேரம் நிச்சயிக்கப்படுகிறது!
ஜனன கால ஜாதகத்தில், குரு தசை 16 வருடங்கள் என ஜோதிடக் கலை நிர்ணயித்துள்ளது. குழந்தை பிறக்கும்போது, குரு பகவான் சுப பலம் பெற்றிருப்பின், குரு தசையின்போது, பரிகாரம் ஏதும் வேண்டியதில்லை. ஆயினும், ஜனன காலத்தில், குரு பலம் குறைந்திருந்தால், அவருக்கான எளிய பரிகாரங்கள் பெரியோர்களால் அருளப்பட்டுள்ளன.
குரு பகவானின் பிள்ளை கசன்! இறந்த அசுரர்களை மீண்டும் பிழைக்கவைத்து, போரிட வைக்கும் “ம்ருத சஞ்சீவினி” எனும் அரிய மந்திரத்தை, அசுர குருவான சுக்கிராச்சாரியார் மட்டுமே அறிந்துவைத்திருந்தார். இந்த அற்புத சக்திவாய்ந்த மந்திரத்தைக் கொண்டு சுக்கிரன், தேவர்களுக்கும் – அசுரர்களுக்கும் நடக்கும் போர்களில், இறந்த அசுரர்களை மீண்டும் உயிர்ப்பிழைக்க வைத்தார்!
எவ்விதமாவது அந்த அரிய மந்திரத்தைத் தெரிந்துகொண்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில், குரு பகவானின் பிள்ளையை, சுக்கிரனிடம் அனுப்பிவைத்தனர். இதனையறிந்த அசுரர்கள், கசனைக் கொல்வதற்கு சூழ்ச்சி செய்தனர். ஒவ்வொரு முறையும் சுக்கிரனின் மகளான தேவயானி அவனைக் காப்பாற்றிவந்தாள். காரணம், கசனை அவள் விரும்பியதேயாகும். இருப்பினும், அவளது ஆசையை, கசன் நிராகரித்தான். மிகவும் பாடுபட்டு கற்றுக் கொண்ட சஞ்ஜீவினி மந்திரத்தை, மறந்துபோகும்படி சாபமிட்டாள் தேவயானி!
ஏமாற்றத்துடன் தேவர்களின் உலகிற்கு திரும்பினான், கசன்!
ஒவ்வொரு ராசியிலும், சுமார் ஒருவருடக் காலம் சஞ்சரிக்கும் குரு பகவான், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஓர் புண்ணிய நதியில் ஆவிர்பவிப்பது வழக்கம். அவ்விதம் அவர் புண்ணிய நதியில் சங்கமிக்கும் புண்ணிய காலம், “கும்ப மேளா” -என்று கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக, “திரிவேணி” எனப் பூஜிக்கப்படும் “பிரயாக்ராஜ்” (உத்திரப்பிரதேசம்) எனும் திவ்ய ேக்ஷத்திரத்தில் “கும்பமேளா” என்றும், “மஹாமேளா” என்றும் குரு பகவானின் சாநித்யம் கொண்டாடப்படுகிறது. அத்தகைய விசேஷ தருணங்களில், உலகெங்கிலுமிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், சந்நியாசிகள், ஆன்றோர்கள், சான்றோர்கள் ஆகியோர் புண்ணிய ஸ்நானம் செய்து, மனதாலும், வாக்கினாலும், சரீரத்தாலும் செய்துள்ள அனைத்துவிதப் பாபங்களிலிருந்து விடுபடுகின்றனர்.
இப்புண்ணிய தினங்களில், உலக நாடுகள் அனைத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பிரயாக ராஜ் வந்து, திருவேணியில் ஸ்நானம் செய்து, புண்ணிய பலனை அடைகின்றனர்.
பாரதப் புண்ணிய பூமியை ஆண்ட, பிரசித்திப் பெற்ற மன்னர் ஹர்ஷவர்த்தனர் காலத்திலிருந்தே, கும்பமேளா வைபவம் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்ததை சரித்திரம் தன் பொன்னேடுகளில் பொறித்துள்ளது!இத்தகைய பெருமை பெற்ற குரு பகவான், ஒவ்வொரு ராசியிலும் சுமார் 12 மாதங்கள் வலம் வருகிறார். தான் வலம் வரும் ராசியிலிருந்து, 5, 7, 9-ம் இடங்களில், தனது சுபப் பார்வையினால் தோஷமற்றவைகளாகச் செய்துவிடுகிறார்.
பணத்தினாலும், பதவியினாலும், செல்வத்தினாலும், செல்வாக்கினாலும் பெற முடியாத பல வாழ்க்கை சுகங்களை, நமது நற்செயல்கள் (புண்ணிய காரியங்கள்) மூலம் மட்டுமே நாம் பெற முடியும். எந்த அளவிற்கு நாம் பூர்வ ஜென்மங்களில், புண்ணியச் செயல்களைச் செய்துள்ளோம் என்பதை ஜாதகத்தில், குரு பகவானின் நிலையை ஆராய்ந்தால், தெரியவரும்.
ஜனன கால லக்னத்திலிருந்து, பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5-ம் இடத்திற்கு குருவின் பார்வையோ அல்லது அந்த இடத்தில் குரு அமர்ந்திருந்தாலோ, “சார்தாம்” எனப் புகழ்பெற்ற கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்கள் தரிசனங்கள் மட்டுமின்றி, பிரசித்திப் பெற்ற துவாரகை, குருேக்ஷத்திரம், திருவரங்கம், ஜம்புகேஸ்வரம் போன்ற ேக்ஷத்திரம், பத்ரிகாஸ்ரமம், திருக்கயிலை தரிசன பாக்கியமும் கிடைக்கும் என பண்டைய நூல்கள் கூறுகின்றன.
நிம்மதியான குடும்பம், உத்தமமான மனைவி, ஒழுக்கம் நிறைந்த கணவன், நன்மக்கட்செல்வம், அன்புடன் நடத்தும் எஜமானன், நோயற்ற வாழ்வு, போதுமென்ற அளவிற்கு செல்வம், சொந்த வீடு ஆகிய பெறற்கரிய பேறுகளும், குரு பகவான் கருணையுடன் மனித பிறவியில் தந்தருளும் பேறுகளாகும்.
அனைத்து கிரகங்களுக்கும், நாயகன் எனப் பூஜிக்கப்படும் சூரியனுக்கும், குரு பகவானே ஆசாரியனாவார். பெறற்கரிய கிருஷ்ண – யஜுர் வேதத்தை சூரிய பகவானுக்கு உபதேசித்த பெருமையும், குருவினுடையதே!முற்பிறவியில் ஒவ்வொருவரும், எந்தளவிற்கு நற்செயல்களை (புண்ணியம்) செய்திருக்கின்றார்கள் என்பதை, அவரவரது ஜாதகத்தை கணித்துப் பார்த்தாலே உள்ளங்கை நெல்லிக்கனியெனத்தெரியும்.
இத்தகைய தெய்வீகப் பெருமை பெற்றுள்ள குரு பகவான், விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு, சித்திரை மாதம், 28-ந் தேதி (11-5-2025) அன்று, ரிஷப ராசியை விட்டு, புதன் வீடாகிய மிதுனத்திற்கு மாறுகிறார். அன்றிலிருந்து, துலாம் ராசியையும், கும்ப ராசியையும் தனது சுபப் பார்வையினால் தோஷமற்றவைகளாகச் செய்துவிடுகிறது.
குறிப்பாக, கும்ப ராசியில் ஏற்பட்டுள்ள, சனி – ராகு சேர்க்கை தோஷத்தையும் போக்கியருளுகிறார். மிதுனம், வித்யா (கல்வி) காரகரான, புதனின் ஆட்சிவீடாகும். அங்கு குரு அமர்ந்திருப்பது, அடுத்துவரும் சுமார் ஒரு வருட காலத்திற்கு மாணவ – மாணவியருக்கு, வியக்கத்தக்க கல்வி முன்னேற்றத்தைப் பெற்றுத் தரும்.
இனி, மேஷம் உள்ளிட்ட 12 ராசியினருக்கும், குரு பகவானின் மிதுன ராசி சஞ்சாரத்தினால், ஏற்படக்கூடிய நன்மைகளையும், பிரச்னைகளையும் ஆராய்ந்து பார்ப்போம்.
எந்நெ்த ராசிகளுக்கு, இந்த குரு பெயர்ச்சி, நன்மை தராதோ, அத்தகைய ராசியினருக்கு, எளிய பரிகாரங்களையும், கூறியிருக்கின்றோம்.
செய்வதற்கு எளியவையாகத் தோன்றினாலும், மிகவும் சக்திவாய்ந்தவையாகும்.”பரிகார ரத்தினம்” எனும் மிகப் புராதனமான ஜோதிட நூல்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.
ேஜாதிடக் கலையின் பொது விதிகளின்படி, ஒரு ராசியில் குரு பகவான் ஒரு வருடம் சஞ்சரிப்பார். ஆயினும், பிற கிரகங்களின் ஆகர்ஷண சக்தியினால், சில தருணங்களில் அவரது சஞ்சார வேகம் மாறுபடுகிறது. அத்தகைய தருணங்களில், அவர் வக்கிர, அதிச்சார கதிகளுக்கு ஆளானாலும், அத்தகைய காலகட்டங்களில், அவரது “பூர்வ ராசி பலனே” நமக்குக் கிடைக்கும்.
குரு பார்வை..!
ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் ஆசார்ய ஸ்தானத்தில் உள்ளவரும், தேவாதி தேவர்களுக்கும் பிரகஸ்பதியாகிய குரு பகவானிடம், வேதங்களையும், அனைத்து சாஸ்திரார்த்தங்களையும் கற்றுத் தேர்ந்திட எண்ணிய நவக்கிரகங்களில், மாத்ரு காரகரான சந்திர பகவான், தன்னை மாணாக்கராக ஏற்றுக் கொள்ளுமாறும், சகல கலைகளையும் கற்றுத் தருமாறு வேண்டி நின்றார்.
குரு பகவானும், சந்திரனின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து கலைகளையும் பயிற்றுவித்து, அதில் முக்கியமாக ஜோதிடக் கலையையும் கற்றுக் கொடுத்தார். சந்திரனும் அவற்றின் நுணுக்கங்களனைத்தையும் திறம்படக் கற்றுத் தேர்ந்தார்.
தன் மாணாக்கர்களுக்கு, அவர்கள் கற்றறிந்ததைச் சோதித்துப் பார்ப்பதில் ஆசானுக்கு அலாதி பிரியம்தான்!
ஆகவே, சந்திர பகவானைச் சோதிக்க எண்ணிய குரு, பூலோகத்தில் தற்போது பிறந்துள்ள ஒரு குழந்தையின் ஜனன கால ஜாதகத்தைக் கணித்து, பலா – பலன்களைக் கூறுமாறு பணித்தார்.
சந்திரனும், குழந்தையின் பிறந்த நாள், நேரம், இடத்தையும் குறித்துக் கொண்டு, திறம்பட பலன்களை எழுதினார். அப்பலன்களைக் கண்ணுற்ற குரு பகவான் திடுக்கிட்டார், காரணம், குழந்தையின் முதல் ஆண்டு நிறைவில், கடும் விஷம் கொண்ட ஒரு பாம்பினால் கொல்லப்படுவான் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்து.
அக்குழந்தைக்கு முதலாண்டு முடிவுறும் தினத்தன்று, குரு பகவானும், சந்திரனும் எப்படி அந்நிகழ்வு நடக்கப்போகிறது என்பதையறிய அவ்விடத்திற்கு எழுந்தருளினர்.
தொட்டிலில் அனைத்து புறங்களிலும் மல்லிகை, முல்லை மற்றும் வாசமிகு மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
குழந்தையின் வட்ட முகமும், துரு-துருக் கருவிழிக் கண்களும், மாம்பழக் கன்னங்களும், சுருட்டையான கேசங்களும், காண்போரைக் கண்டவுடன் வாரி அைணக்கத் தோன்றும் குமிழ்ச் சிரிப்பையும் கண்டு மெய்மறந்து நின்றனர். குழந்தை எழுந்து கொள்ள எத்தனித்தவாறு, கை – கால்களை வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தது. அந்தப் பாரத்தைத் தாங்க முடியாமல் மலர் மாலைகளும், தொட்டிலுடன் சேர்ந்து ஆடின. பூ-மாலைகளின் நடுவில் பூநாகம் ஒன்று மெதுவாக ஊர்ந்து, சென்று, குழந்தையின் அருகில் செல்ல முயன்றுகொண்டிருந்தது. தொட்டிலின் ஆட்டத்தினால், சற்றே தடுமாறிய அந்தப் பாம்பு, தவறுதலாக இரும்புச் சங்கிலிகளின் இடுக்கில் வால் பாகம் சிக்கிக் கொண்டது. தனது வால் பாகத்தை விடுவிக்க யத்தனித்த அப்பாம்பின் சிரசானது – எசகு-பிசாகச் சிக்கிக் கொண்டது மட்டமல்லாது, மூச்சுவிடக்கூட சிரமப்பட்டு, ஒருகட்டத்தில் தொட்டிலின் சங்கிலியால் நெரிக்கப்பட்டு, தலையும் உடலும் இரு துண்டாகிக் கீழே விழுந்து, துடிதுடித்து இறந்தது. குழந்தைக்கு ஏதுமொரு துன்பமில்லாமல் சிரிப்புடன் மேலும் பலமாக தொட்டிலில் ஆடிக் கொண்டிருந்ததைக் கண்ட, சந்திரன், தன்னுடைய கணிப்பு தவறானது எவ்வாறு? குழந்தை இறப்பதற்குப் பதிலாகப் பாம்பு இறந்தது எவ்வாறு? என எண்ணி தன்னுடைய கணிப்புகளை மீண்டும் எடுத்து சரி-பார்த்தார். அனைத்தும் சரியாகத்தானே இருக்கிறது?
ஒருவேைள குரு பகவான் சரியாகக் கற்றுத் தரவில்லையோ? -என்ற சந்தேகத்துடன், குரு பகவானை அணுகி, “பிரபோ! என்னுடைய கணிப்புக்கள் அனைத்து சரியாகவே உள்ளன! குழந்தையின் ஜனன ஜாதகத்தில் குருவாகிய தங்கள் பார்வையும் இல்லை. பிறகு, இக் குழந்தை பிழைத்தது எப்படி?” என்று வினவ, குரு பகவான் சிரித்துக் கொண்டே, “ஜாதகத்தில் நீங்கள் கணித்தவைகள் அனைத்தும் சத்தியமே! குழந்தை பிழைத்ததற்கான காரணம், ஜனன ஜாதகத்தில் குரு பார்வை இல்லாவிட்டால் என்ன? நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, என்னுடைய தீக்ஷண்யப் பார்வை நேரடியாக அக்குழந்தைக்குத்தான் கிடைத்துக் கொண்டேயிருந்ததே!” எனக் கூறக் கேட்ட சந்திரன், “குருபகவானின் பார்வை, பல கோடி தோஷங்களையும் போக்க வல்லது; குரு பார்க்கக் கோடி நன்மை!” என்பதையும் புரிந்து கொண்டு குருபகவானை வணங்கி நின்றார்.
இந்தத் தினத்தன்று, அருகிலுள்ள திருக்கோயிருக்குச் சென்று, மூன்று மண் அகல் விளக்குகளில் பசு நெய் தீபமேற்றிவைத்து குரு பகவானை தரிசிக்க வேண்டும். குரு பகவானுக்கு வியாழக்கிழமை விசேஷமானதாகையால் அன்றைய தினத்தில், குரு பகவானுக்கு, மல்லிகை – முல்லை மற்றும் நறுமண மலர்களைக் கொண்டு அர்ச்சித்தல் வேண்டும்.
வேகவைத்த வேர்க்கடலை, கொண்டைக் கடலை மற்றும் சர்க்கரைப் பொங்கல் செய்து, நைவேத்தியம் செய்வித்துவிட்டு, பக்தர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். வசதிபடைத்தவர்கள், வஸ்திர தானம் செய்தால் மகத்தான புண்ணிய பலன்களைப் பெறுவர்.
தேவர்களைக் காக்கவும் அசுரர்களை அழிக்கவும் முருகப் பெருமானின் அவதாரத் திருத்தலமாகிய இரண்டாம் படைவீடாகத் திகழும் திருச்செந்தூரில், குருபகவானே, அசுரர்களின், பலம் – பலவீனங்கள் இரண்டையும் எடுத்துரைத்த காரணத்தால், இத்திருத்தலம் குரு பகவானுக்கு உகந்த தலமாகக் கொண்டாடப்படுகிறது.
ஒருவரின் ஜனன ஜாதகத்தில், மற்றைய கிரகங்கள் எதிர்மறையாக இருந்தாலும், குரு பகவானின் பார்வை மட்டும் இருந்துவிட்டால், அனைத்து கிரகங்களின் தோஷங்களும், அனலிடையிட்ட மெழுகைப்போல, கதிரவனைக் கண்ட பனிபோல் விலகி, நன்மைகளை அள்ளித் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.
“குரு மற்றும் பிரஹஸ்பதி”என்றாலே அஞ்ஞானமாகிய இருட்டைப் போக்கி, நம் வாழ்வில் ஒளிதீபம் ஏற்றிவைப்பவர் என்பதே பொருள்!
திருவாரூரில் ஆலங்குடி (மூவுலகையும் காத்தருள, சிவபெருமான் ஆலகால விஷத்தைப் பருகிய காரணத்தால், ஆலங்குடி என்ற காரணப் பெயராயிற்று!) பிரதான குரு திருத்தலமாக அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் மட்டும்தான், குரு பகவான் தேரில் உலா வருவது விசேஷமானது.
சென்னை – பாடி-திருவலிதாயத் திருத்தலத்தில், தனக்கு சாப விமோசனமளித்த சிவபெருமானைத் துதிக்கும் வகையில் மேற்குநோக்கிய நிலையிலும் நமக்குக் காட்சியளிக்கின்றார்.
சிவகங்கை மாவட்டத்தில் பட்டமங்கல திருத்தலத்தில், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். விசேஷமாக, மண்டபத்தில் ராசிக்கட்டம் கற்சிலையாய் வடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சையில் தென்குடி திட்டையில், வசிஷ்டேஸ்வரருக்கும் – ஸ்ரீமங்களாம்பிகை தாயாருக்கும் நடுவில்” ராஜகுரு”வாக அருள்பாலித்தருள்கிறார்.
மதுரையில், சோழவந்தான் – குருவித்துறையில் சுயம்பு மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார்.
அரக்கோணத்தில் கம்மவார்ப்பாளையத்திலிருந்து கோவிந்தவாடி திருத்தலத்தில் வியாக்யான குரு பகவானாக அருள்பாலிக்கின்றார்.
இத்திருத்தலங்களுக்குச் செல்பவர்கள், நாட்டு மாட்டுப் பசு நெய் கொண்டு சென்று, மண் அகல் விளக்கில் தீபமேற்றிவிட்டு வர மறக்க வேண்டாம்.
திருத்தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள், தங்கள் வீட்டிலேயே மாக்கோலமிட்டு, குரு பகவானின் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, மூன்று மண் அகல் விளக்கில் நெய் தீபமேற்றி, ஊறவைத்து வேக வைத்த வேர்க்கடலை அல்லது கொண்டைக்கடலை நைவேத்தியம் செய்து, வணங்கினாலும், நல்ல பரிகார பலனாக, சகல சௌபாக்கியங்களையும்் பெறப்போவது திண்ணம். தேவை, நம்பிக்கையுடன் கூடிய பக்தி மட்டுமே!
தேவனாம்ஸ ரிஷீனாம்ஸ குரூம் காஞ்சன ஸந்நிபம்
புத்திபூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்
இம்மகா மந்திரத்தை இன்றைய தினத்தில் 108 முறை சொன்னாலே, கேட்டாலே, மனத்தளவில் நினைத்தாலே போதும், மகத்தான புண்ணிய பலன்களைப் பெறுவீர்கள்!
The post மிதுனத்தில் குரு..! வதனத்தில் மகிழ்ச்சி..? appeared first on Dinakaran.