தருமபுரி: சங்ககிரி அருகே அரசு பேருந்திலிருந்து சாலையில் விழுந்து 9 மாத குழந்தை இறந்த விவகாரம் தொடர்பாக அரசு பேருந்தின் ஓட்டுநர் சிவன்மணி, நடத்துநர் பழனிசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பேருந்தின் கதவை ஒழுங்காக மூடாததால் திடீரென பிரேக் போட்டபோது சாலையில் விழுந்து குழந்தை உயிரிழந்தது.
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ராஜதுரை – முத்துலட்சுமி தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 9 மாத ஆண் குழந்தையும்(நவனீஸ்) உள்ளது. ராஜதுரை – முத்துலட்சுமி தமபதியினர் கோவையில் வசித்து கட்டிட கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற இவர்கள் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கோவை செல்வதற்காக சேலத்தில் அரசு பேருந்தில் தங்களது இரு குழந்தைகளுடன் ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற இருக்கையில் அமர்ந்துள்ளனர்.
அப்போது பேருந்தின் முன் பக்க கதவு திறந்திருந்ததால் கதவை மூடுமாறு நடத்துனரிடம் ராஜதுரை தெரிவித்தும் நடத்துனர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். பேருந்து சங்ககிரி அருகேயுள்ள கத்தேரி வளையக்காரனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென ஓட்டுனர் பிரேக் பிடித்ததால் ராஜதுரை தோளில் இருந்த அவரது மகன் திறந்து வைக்கப்பட்டிருந்த படிக்கட்டு வழியாக பேருந்திலிருந்து சாலையில் விழுந்துள்ளார்.
பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டதும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பார்த்தபோது ரத்த காயங்களுடன் இருந்த குழந்தையை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததால் குழந்தை தவறி விழுந்ததாக பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தேவூர் போலீசார் ஓட்டுநர், நடத்துனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று குழந்தை உயிரிழந்தது தொடர்பாக அரசு பேருந்தின் ஓட்டுநர் சிவன்மணி, நடத்துநர் பழனிசாமி ஆகியோரை போக்குவரத்து கழகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 9 மாத குழந்தை பேருந்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.