நன்றி குங்குமம் டாக்டர்
அலெர்ட் ப்ளீஸ்!
காது வலி என்பது குறித்த புரிதல் நம்மிடம் இன்னமும் மருத்துவரீதியாக இல்லை. சளிப் பிடித்தால் சிலருக்கு காதுவலி வரும் என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலரோ எதையேனும் காதில் விட்டுக் குடைவதால் ஏற்படும் ரணத்தால் காதுவலி ஏற்படுகிறது என்ற அளவில் புரிந்துவைத்திருக்கிறார்கள். காது வலி என்பது என்ன? குறிப்பாக நடுச்செவி இடைச் செவியில் உருவாகும் வலி எதனால் வருகிறது என்று பார்ப்போம்.
நடுச் செவி (Middle Ear) என்பது செவித்திரைக்கும் (Tympanic Membrane) உட்செவிக்கும் (Inner Ear) இடையில் உள்ள பகுதி. இப் பகுதியில்தான் யூஸ்டாசியன் குழாய் (Eustachian Tube) எனும் அமைப்பு உள்ளது. காது வலி அதிகமாகத் தோன்றுவது இப் பகுதியில்தான். நடுச்செவி அழற்சிக்கு சில காரணங்கள் உள்ளன. குறிப்பாக, காதுக்குள் அழற்சியை உண்டு பண்ணி, வீக்கத்தினால் வலியை உண்டு பண்ணுபவை நோய்க் கிருமிகள். இவை வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று என மூன்று வகையில் அடங்கும்.
தொண்டை, மூக்கு, காது ஆகிய மூன்று உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால் காதுக்குள் கிருமிகள் புகுதல் எளிது. சாதாரண சளி பிடித்தாலே போதும், காதில் அடைப்பு உள்ளதை நாம் உணரலாம். அது போன்றே மூக்கைச் சிந்தும் போதும் கூட காது வலி தோன்றலாம். இவ்வாறு சளித் தொற்றால் உண்டாகும் காது வலி தற்காலிகமானது. சளி நின்றதும் வலியும் நின்று விடும்.
நோய்க் கிருமிகளில் பாக்டீரியா அதிகம் வீரியமிக்கவை. இவற்றில் பல்வேறு வகைகள் உள்ளன. காது வலிக்கு பரவலான காரணம் ஸ்ட்ரெப்டோகோகஸ் நிமோனி (Streptococcus Pneumoniae) என்ற பாக்டீரியாதான் பிரதானமானது. இதைத் தவிர வேறு சில பாக்டீரியா கிருமிகளும் காரணம். சூடோமோனஸ் ஏரோஜினோஸா (Pseudomonas Aeroginosa), ஹேமோபிலஸ் இன்ப்ளூயன்ஸா (Haemophilus Influenzae), மார்க்செல்லா கேட்டர்ஹலிஸ் (Moraxella Catarrhalis) போன்ற பாக்டீரியா கிருமிகளும் முக்கியமானவை. இவற்றில் ஹேமோபிலஸ் இன்ப்ளூயன்ஸா (Haemophilus Influenzae) கிருமிகள் இளம் வயதினரை அதிகம் தாக்க வல்லது.
வைரஸ் கிருமிகளில் சாதாரண சளியை உண்டு பண்ணும் வைரஸ் ( Common Cold Virus ), சுவாசப் பாதை சின்சிட்டியல் வைரஸ் (Respiratory Syncytial Virus) ஆகியவை சுவாசக் குழாய்களின் எதிர்ப்புச் சக்தியைக் குறைப்பதுடன் காதையும் பாதித்து விடுகின்றன. பல்வேறு வகையான பூஞ்சைகளும் (Fungus) காதுகளில் தஞ்சம் புகுந்து செவித்திரையில் வளர்கின்றன. இவற்றை நாம் பெரும்பாலும் காது குடையும் பஞ்சு குச்சிகளால் பரவ விடுகிறோம். ஒரு சிலருக்கு இப் பிரச்னை தொடர்ந்து காணப் பட்டால் அதை க்ரானிக் ஒடிடிஸ் மீடியா (Chronic Otitis Media) என்று கூறுவதுண்டு. இதை சரி செய்ய தொடர்ந்து மருந்துகள் பயன்படுத்த வேண்டும்.
வைரஸ் கிருமிகளால் சளி பிடித்த பின் காய்ச்சலுடன் காது வலி உண்டாகலாம். இந்த வலி சளி நின்றதும் போய் விடும். இதை அக்யூட் ஓடிடிஸ் மீடியா (Acute Otitis Media) என்பர்.
ஆனால் பேக்டீரியா கிருமிகளால் இப்படி தொற்று உண்டானால் அதிகக் காய்ச்சல் ஏற்பட்டு, நடுச் செவியில் அழற்சியும் வீக்கமும் உண்டாகி, சீழ் பிடித்து, செவித்திரை கிழிந்து, காதுப் பகுதியின் எலும்புகள் பாதித்து கிருமித் தொற்று மூளைப் பகுதியிலும் பரவலாம். இது ஆபத்தை உண்டு பண்ண வல்லது.
மேற்கூறிய இரண்டு வகையான காது வலியிலும் செவித்திரை பாதிக்கப்பட்டு அதில் துவாரம் ஏற்பட்டு சீழ் வடிய நேர்ந்தால் காது கேட்பதும் பாதிக்கப்படும்.இவ்வாறு தொடர்ந்து காதிலிருந்து சீழ் வடிந்தால் அதைக் ரானிக் சப்பரேட்டிவ் ஓடிடிஸ் மீடியா (Chronic Suppurative Otitis Media ( CSOM )) என்பர்.
அறிகுறிகள்
காதுவலி அதிக காய்ச்சல்: 38°C (100.4°F) அல்லது அதிகம் ஆற்றல் குறைதல்
சற்று காதுகேளாமை பெரும்பாலும் மூக்கு ஒழுகுதல், இருமல் காரணங்கள்
தொண்டைகாது இணைப்புக் குழாயில் பாக்டீரியா அல்லது வைரசால் தொற்று உண்டாகும்போது இடைக்காது அழற்சி ஏற்படுகிறது.
தொண்டைகாது இணைப்புக் குழாய் நடுக்காதில் இருந்து மூக்கின் பின்பகுதி வரை செல்கிறது. இதற்கு இரண்டு முக்கிய வேலைகள் உண்டு:
இயல்பான காற்றழுத்தத்தைப் பராமரிக்க நடுக்காதிற்கு காற்றோட்டம் தருவது.
காதில் இருந்து சளி மற்றும் அழுக்குகளை வெளியேற்ற உதவுவது.
உடலின் இன்னொரு பகுதியில் ஏற்படும் தொற்றினால் தொண்டை-காது இணைப்புக்குழல் அடைபட்டு தொற்று உண்டாகும். உள்நாக்கு அல்லது மூக்கு அடிச்சதை வீக்கம் தொண்டை-காது இணைப்புக் குழாயில் அடைப்பு ஏற்படுத்தும். உள்நாக்கும் மூக்கு அடிச்சதையும் தொடர்ந்து அடிக்கடி காதுத் தொற்றை ஏற்படுத்தினால், அவற்றை அகற்றி விடலாம். இப்பிரச்சினை பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகம் இருக்கும்.
நோய் கண்டறிதல்
இடைச்செவி அளவியல் காற்று அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப செவிப்பறை எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது என்பதை அளக்க இது உதவுகிறது. காற்றழுத்தத்தில் மாறுதல் இருந்தால் ஓர் ஆரோக்கியமான செவிப்பறை எளிதாக நகர வேண்டும். ஒரு ஒலியை காதுக்குள் ஏற்படுத்தும்போதே, காதுக்குள் வைக்கப்படும் ஒரு ஆய்வுப்பொறி காற்றழுத்தத்தை குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றம் அடையச்செய்யும். காதில் இருந்து எதிரொலிக்கப்படும் ஒலியையும், காற்றழுத்தத்தில் ஏற்படும் மாறுதல்கள் எவ்வாறு இவ் அளவீடுகளைப் பாதிக்கின்றன என்பதையும் ஆய்வுப்பொறி அளவிடும். காற்றழுத்தம் அதிகமாக இருக்கும்போது குறைந்த ஒலியே எதிரொலிக்கப்பட்டால் பொதுவாகத் தொற்று இருக்கிறது என்பது பொருளாகும்.
இடைக்காது துளையிடல்
இடைக்காதில் இருக்கும் பாய்மத்தை (திரவம்) ஒரு சிறிய ஊசி மூலம் வெளியேற்றி எடுத்தல். பின் தொற்றுக்குக் காரணமான நுண்ணுயிரிகள் உள்ளனவா என்று சோதனை செய்யப்படும். கணினி வரைவி ஊடுகதிர் (சி.டி.ஸ்கேன்) இடைக்காதில் இருந்து தொற்று மேலும் பரவி இருக்கும் என்று கருதினால் கணினி வரைவி ஊடுகதிர்ப்படம் எடுக்கப்படும். கணினி வரைவியில், சில தொடர் ஊடுகதிர் (எக்ஸ்ரே) மூலம் படங்கள் எடுக்கப்பட்டு பின் கணினியின் உதவியினால் அதிக விவரங்கள் கிடைக்கும்படி மண்டையோட்டின் முப்பரிமாணப் படமாகத் தொகுக்கப்படுகின்றன.
சிகிச்சை முறை
சாதாரணமாக காது வலி எனில், கிளினிக்கில் மருத்துவர் காதைப் பரிசோதனை செய்து விட்டு வலி குறைக்கும் மருந்தும், சொட்டு மருந்தும், எண்ட்டிபையாட்டிக் மருந்தும் தருவார்கள். பெரும்பாலும் அதில் வலி குறைந்து குணம் பெறலாம்.ஆனால் வலி தொடர்ந்து இருப்பின், காது, மூக்கு, தொண்டை நிபுணரைப் பார்ப்பதே நல்லது. அவர் காது, மூக்கு, தொண்டைப் பகுதிகளை ” ஸ்கோப் ” மூலம் பரிசோதனை செய்து உண்மைக் காரணத்தைக் கண்டறிவார்.
பொதுவாக அமாக்ஸிலின் (Amoxycillin) அல்லது அமாக்சலின்- க்ளாவுல்னேட் (Amoxycillin Clavulanate) போன்ற எண்ட்டிபையாட்டிக் மருந்துகள் தரப்படுவதுண்டு. தேவைப்பட்டால் ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படும்.
தொகுப்பு: லயா
The post ஓடிடிஸ் மீடியா… நடுச்செவி அழற்சி! appeared first on Dinakaran.