கணவன், மனைவிபோல நடித்து பட்டப்பகலில் சைக்கிள் திருடிய கள்ளக்காதல் ஜோடி சிக்கியது : பைக்குக்கு பெட்ரோல் போட ₹1000க்கு விற்றதாக வாக்குமூலம்

16 hours ago 2

அண்ணாநகர்: முகப்பேர் பகுதியில் பட்டப்பகலில் தம்பதி போல வந்து, சைக்கிள் திருடிய கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். பைக்குக்கு பெட்ரோல் போட பணம் இல்லாததால் சைக்கிளை திருடி காயலான் கடையில் ₹1000க்கு விற்பனை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை முகப்பேர் பிரதான சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்கள் மற்றும் பைக்குகள் அடிக்கடி திருட்டுப்போனது. இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பின்னர் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின்படி, ஜெ.ஜெ.நகர் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான பைக்குகளில் நம்பரை வைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், ஒரு பைக் நம்பரை வைத்து அயப்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த வீட்டில் இருந்த ஒரு பெண், வாலிபரை பிடித்து விசாரித்தபோது அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த முகமது தீன் (36) என தெரிய வந்தது. இவருக்கு 2 பெண்கள் உள்ளனர். இவரிடம் கேஷியராக பணியாற்றிய தேவி (32) என்பவரையும் கைது செய்தனர். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் முகமதுதீனுடன் கள்ளக்காதலில் இருந்ததும் தெரியவந்தது.

கள்ளக்காதல் ஜோடி போலீசாரிடம் கூறுகையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு முகப்பேர் பகுதியில் வீடு வாடகைக்கு பார்த்துவிட்டு வரும்போது எங்களது பைக்கில் பெட்ரோல் இல்லாததால் ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த புதிய சைக்கிளை திருடிக்கொண்டு அப்பகுதியில் உள்ள காயலான் கடையில் ₹1000க்கு விற்பனை செய்துவிட்டு அந்த பணத்தில் பெட்ரோல் போட்டோம் என்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்தனர். இவர்கள் வேறு எங்கேயாவது கைவரிசை காட்டி உள்ளார்களா எனவும் விசாரணை நடத்துகின்றனர்.

The post கணவன், மனைவிபோல நடித்து பட்டப்பகலில் சைக்கிள் திருடிய கள்ளக்காதல் ஜோடி சிக்கியது : பைக்குக்கு பெட்ரோல் போட ₹1000க்கு விற்றதாக வாக்குமூலம் appeared first on Dinakaran.

Read Entire Article