புழல்: புழல் காந்தி சாலையில் ₹11 கோடியில் அரசுப்பள்ளி கட்டிடப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பணிகள் முடிந்து விரைவில் கட்டிடம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 23வது வார்டு புழல் காந்தி பிரதான சாலையில் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். போதுமான இடவசதி இல்லாததாலும், கட்டிடங்கள் பழமைவாய்ந்ததாக இருப்பதினாலும் புதிதாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டக்கோரி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சிராணி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் மாதவரம் தொகுதி எம்எல்ஏ சுதர்சனத்திடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் சென்னை பெருநகர குழுமத்தின் சார்பில் ₹11 கோடி மதிப்பில் தரைத்தளம் உள்ளிட்ட மூன்று மாடி கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டுப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதில் வகுப்பறை கட்டிடம், கணினி அறை, கழிப்பிடம், ஆசிரியர்கள் ஓய்வறை, உடற்பயிற்சிக் கூடம், அறிவியல் ஆய்வகம், கூட்ட அரங்கம் ஆகியவை அமைகிறது. இந்த பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ மற்றும் மாநகராட்சி, சென்னை பெருநகர குழும அதிகாரிகள் கடந்த மாதம் 31ம் தேதி பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.
இந்நிலையில் தற்போது கட்டிட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து ஒப்பந்ததாரர் கூறுகையில், அரசுப்பள்ளி கட்டிடப் பணி அதிக ஊழியர்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் என்றனர்.
The post மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ₹11 கோடியில் புதிய கட்டிடம்: கட்டுமான பணிகள் விறுவிறுப்பு appeared first on Dinakaran.