போதைப்பொருட்கள் கடத்திய லாரி டிரைவர் கைது

16 hours ago 2

திருவொற்றியூர்: மணலி, எம்.எப்.எல். சந்திப்பில், போக்குவரத்து ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெகன்நாதன், தலைமை காவலர் பார்த்திபன், காவலர் சலீம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு சாலையோரம் நின்றிருந்த லாரியிலிருந்து அட்டை பெட்டிகளும், மூட்டைகளும் கீழே இறக்கி மற்றொரு வாகனத்தில் ஏற்றுவதற்காக நின்றிருந்தனர். சந்தேகம் அடைந்த போக்குவரத்து போலீசார் அந்த பெட்டியையும் மூட்டையையும் சோதனையிட்டபோது அதில் ஆந்திர மாநிலத்தின் மதுபாட்டில்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து லாரி டிரைவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், ஆந்திராவிலிருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களையும், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களையும் வாங்கி வந்து சென்னையில் சப்ளை செய்வது தெரிந்தது. பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் மாரியப்பன் (50) என்பவரை பிடித்து, சாத்தாங்காடு போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்து லாரியில் கடத்தி வரப்பட்ட 17 ஹான்ஸ் பாக்கெட், 157 விமல் பாக்கு பாக்கெட், 3 கூலிப், 20 ஆந்திர மதுபாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணைக்கு பின் அவரை சிறையில் அடைத்தனர்.

The post போதைப்பொருட்கள் கடத்திய லாரி டிரைவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article