ஓசூரில் பல வண்ண பூக்கள் உற்பத்தி பாதிப்பு சீன பிளாஸ்டிக் மலர்களுக்கு ஒன்றிய அரசு தடை விதிக்குமா? விவசாயிகள் வலியுறுத்தல்

4 weeks ago 8

ஓசூர்: ரோஜா நகரம் என அழைக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் ரோஜா, சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பலவண்ண மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஓசூர், தளி, கெலமங்கலம் ஆகிய 3 பகுதிகளில், பசுமை குடில் மூலம் பல்வேறு வகையான ரோஜாக்களை உற்பத்தி செய்து, அதனை நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால், ரோஜா உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

டெல்லி, கேரளா, நேபாளம், உள்நாடுகளில் வரவேற்பு உள்ளதால், தினமும் ஓசூர் பகுதியிலிருந்து 30 ஆயிரம் கட்டு மலர்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் விவசாயிகள் அலங்கார மலர்கள் உற்பத்தியில் ஆர்வம் காட்டி வந்தாலும், சீனா பிளாஸ்டிக் மலர்களால் உற்பத்தி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஓசூர் பூக்கள் உழவர் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஹரீஸ் கூறுகையில், ஆண்டுதோறும் அலங்கார மலர் உற்பத்தி அதிகரித்த நிலையில், தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சீனாவில் தயாரிக்கும் பிளாஸ்டிக் மலர்கள் வரவு அதிகரித்துள்ளதுதான். இதனால் தினமும் ரூ.10 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்ற நிலையில், தற்போது ரூ.5 கோடிக்கு மட்டும் வர்த்தகம் நடக்கிறது. கடந்த காலங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கார்பன் டை ஆக்சைடு வெளியாவதை தடுக்க, மேடைகளில் அலங்கார மலர்கள் பயன்படுத்தப்பட்டது.

நாளடைவில் சீன பிளாஸ்டிக் மலர்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஓசூரில் அதிகளவில் மலர் உற்பத்தி செய்வதால், பேரண்டப்பள்ளில் ரூ.22 கோடியில் தொடங்கப்பட்ட சர்வதேச மலர் சந்தையில், ரூ.100 கோடிக்கு வர்த்தகம் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அவை சரிவர செயல்படாமல் உள்ளது. எனவே, ஓசூர் மலர் உற்பத்தி விவசாயிகளின் நலன் கருதி, சீன பிளாஸ்டிக் மலர்களுக்கு ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும். மலர்களை சர்வதேச மலர்சந்தை மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஓசூரில் பல வண்ண பூக்கள் உற்பத்தி பாதிப்பு சீன பிளாஸ்டிக் மலர்களுக்கு ஒன்றிய அரசு தடை விதிக்குமா? விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article