இஸ்ரோ தலைவராக நாராயணன் பொறுப்பேற்பு: தமிழகத்தை சேர்ந்தவர்

2 hours ago 2

பெங்களூரு: இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற தமிழகத்தை சேர்ந்த வி.நாராயணனுக்கு முன்னாள் தலைவர் சோம்நாத் வாழ்த்து தெரிவித்தார். இஸ்ரோ தலைவரான சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. இதையடுத்J இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி.நாராயணனை ஒன்றிய அரசின் நியமனக்குழு நியமனம் செய்தது. இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு முன்னாள் தலைவர் சோம்நாத் வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் வலைதளத்தில், ‘புகழ்பெற்ற விஞ்ஞானி (அபெக்ஸ் கிரேடு) டாக்டர் வி.நாராயணன், விண்வெளி துறை செயலாளர், விண்வெளி ஆணைய தலைவர் மற்றும் இஸ்ரோவின் தலைவர் பதவிகளை ஏற்று கொண்டார். இது இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கான ஒரு முக்கிய தலைமைத்துவ மாற்றத்தை குறிக்கிறது. இஸ்ரோவில் கிட்டத்தட்ட 4 தசாப்தங்களாக பணியாற்றி வரும் அவரது தலைமை, இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு வழிகாட்ட உள்ளது” என்று பதிவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் வி.நாராயணன். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநராக பணியாற்றியுள்ளார். கரக்பூர் ஐஐடியில் பட்டம் பெற்றவர். 1984ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார். இந்திய விண்வெளித் துறையில் 40 ஆண்டு அனுபவமுள்ளவர். ராக்கெட் மற்றும் விண்கல திரவ உந்து விசையில் நிபுணத்துவம் பெற்றவர். தொடக்க காலத்தில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஒலி ராக்கெட்டுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவுதளம் மற்றும் துருவ செயற்கைக்கோள் ஏவுதளம் ஆகியவற்றின் திட உந்துவிசை பகுதியில் பணியாற்றினார். இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, சூரிய ஆய்வுக்கான ஆதித்யா எல்1 திட்டம், ஜிஎஸ்எல்வி மாக்-3 வகை ஏவுகணைக்கான ‘சிஇ20 கிரையோஜெனிக்’ இன்ஜின் தயாரிப்பு, சந்திரயான் 2 மற்றும் 3 உள்ளிட்ட பல திட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார்.

The post இஸ்ரோ தலைவராக நாராயணன் பொறுப்பேற்பு: தமிழகத்தை சேர்ந்தவர் appeared first on Dinakaran.

Read Entire Article